4. ஊர்காண் காதை




30

மறத்துறை நீங்குமின் வல்வினை யூட்டுமென்
றறத்துறை மாக்கள் திறத்திற் சாற்றி
நாக்கடிப் பாக வாய்ப்பறை யறையினும்
யாப்பறை மாக்கள் இயல்பிற் கொள்ளார்
தீதுடை வெவ்வினை யுருத்த காலைப்
பேதைமை கந்தாப் பெரும்பே துறுவர



27
உரை
32

       மறத்துறை நீங்குமின் - பாவ நெறியினின்றும் விலகு மின், வல் வினை ஊட்டும் என்று - நீங்கீராயின் அப் பாவச்செயல் தன் பயனாகிய துன்பத்தினை நுகர்விக்கும் என, அறத்துறை மாக்கள் - அறத்துறையில் நின்ற அறவோர், திறத்திற் சாற்றி நாக் கடிப்பு ஆக வாய்ப்பறை அறையினும் - அவரவர்க்கு ஏற்ற வகையான் நாவாகிய குறுந்தடியான் வாயாகிய பறையை அறைந்து கூறினும், யாப்பு அறை மாக்கள் இயல்பிற் கொள்ளார் - அறிவென்னும் உறுதியற்ற மாக்கள் அதனை நன்மைத் தன்மையின் ஏற்றுக்கொள்ளாராகி, தீது உடை வெவ்வினை உருத்த காலை - பின்னர்த் தீப்பயனையுடைய கொடிய வினை யானது தோன்றித் தன் துன்பப் பயனை ஊட்டுங்காலத்து, பேதைமை கந்துஆப் பெரும் பேதுறுவர் - தம் அறியாமை காரணமாக மிகவும் மயக்கமுறுவர் ;

       திறம் - நன்மை தீமை என்னும் வகை எனினும் பொருந்தும். சாற்றி அறையினும் என்பவற்றுள் விகுதி பிரித்துக் கூட்டி அறைந்து சாற்றினும் என மாறுக. உருத்தல் - தோன்றிப் பயனளித்தல் ; 1"உம்மை வினைவந் துருத்த லொழியாது" என வருதல் காண்க.

1 மணி, 26 ; 32.