|
70
75 |
குடகாற் றெறிந்து கொடிநுடங்கு மறுகின்
கடைகழி மகளிர் காதலஞ் செல்வரொடு
வருபுனல் வையை மருதோங்கு முன்றுறை
விரிபூந் துருத்தி வெண்மண லடைகரை
ஓங்குநீர் மாடமொடு நாவா யியக்கிப்
பூம்புணை தழீஇப் புனலாட் டமர்ந்து
|
|
குடகாற்று
எறிந்து - மேல்காற்று விசைத்து வீசுத லான், கொடி நுடங்கு மறுகின் - கொடிகள் அசைகின்ற
மறு கின்கண் உள்ள, கடை கழிமகளிர் - பெண்டிர்க்கமைந்த எல்லையினைக் கழிந்த பொது
மகளிர், காதலம் செல்வரொடு - தம் பாற் காதல்கொண்ட செல்வ இளைஞருடன், வருபுனல் வையை
மருது ஓங்கு முன்துறை - இடையறாது நீரொழுகும் வையை யாற்றின் ஓங்கிய திருமருதத்துறை முன்னர்,
விரிபூந்துருத்தி வெண்மணல் அடைகரை - பரந்த பொலிவுபெற்ற ஆற்றிடைக் குறையின் வெள்ளிய
மணலையுடைய அடைகரைக்கண், ஓங்கு நீர் மாடமொடு நாவாய் இயக்கி - உயர்ந்த பள்ளியோடத்
தோடு தோணிகளை ஏறிச் செலுத்தியும், பூம் புணை தழீஇ - பொலிவு பெற்ற தெப்பத்தினைத்
தழுவி நீந்தியும், புனல் ஆட்டு அமர்ந்து - இங்ஙனம் நீராடுதலை விரும்பி ;
ஆடித்திங்களாதலின் குடகாற்றெறிந்த
தென்க. பொது மகளிர் வரம்பினில்லாதவராகலான் கடைகழி மகளிர் எனப்பட்டனர். கடை
- எல்லை, வரம்பு. இனி, நாணும் மடனும் பெண்மையவாக லான், இவற்றைக் கழிந்தே கடைகழிய
வேண்டுதலின் கடைகழி மகளிர் எனப் பொதுமகளிர்க்குப் பெயர் கூறினார் எனலுமாம். பொதுமகளிர்க்குக்
காதல் பொருளின்கண்ண தாகலான், காதலம் செல்வர் என்பதற்குத் தாம் காதலிக்கும் செல்வத்தினையுடைய
காமுகர் எனக் கோடலும் அமையும். மருதமரம் ஓங்கியுள்ளமையால் திருமருதந் துறையெனப் பெயர்
பெற்ற நீர்த்துறையென்க.
இத்துறை சங்கச் செய்யுள் பலவற்றாற்
சிறப்பிக்கப்படுவது;
1"திசை
திசை தேனார்க்குந் திருமருத முன்றுறை," 2"வருபுனல்
வையை வார்மண லகன்றுறைத், திருமரு தோங்கிய விரிமலர்க் காவின்," 3"தீம்புனல்
வையைத் திருமருத முன்றுறையால் என்பன காண்க.
இது
சிறுபொழுதாறினும் காலைப்பொழுது கழிக்குமாறு கூறியது. |
1
கலி, 26. 2
அகம், 36. 3 பரி, 22; 45.
|
|