4. ஊர்காண் காதை





80

தண்ணறு முல்லையுந் தாழ்நீர்க் குவளையும்
கண்ணவிழ் நெய்தலுங் கதுப்புற அடைச்சி
வெண்பூ மல்லிகை விரியலொடு தொடர்ந்த
தண்செங் கழுநீர்த் தாதுவிரி பிணையல்
கொற்கையம் பெருந்துறை முத்தொடு பூண்டு
தெக்கண மலயச் செழுஞ்சே றாடிப
பொற்கொடி மூதூர்ப் பொழிலாட் டமர்ந்தாங்கு



76
உரை
82

       தண் நறு முல்லையும் - குளிர்ந்த நறிய முல்லை மலரும், தாழ்நீர்க் குவளையும் - ஆழ்ந்த நீரிற் பூத்த செங்குவளை மலரும் கண் அவிழ் நெய்தல் - கண்போல் மலர்ந்த நெய்தல் மலரும், ஆகிய இவற்றை, கதுப்பு உற அடைச்சி - கூந்தலிற் பொருந்தச் சூடி, வெண்பூ மல்லிகை விரியலொடு தொடர்ந்த - மல்லிகையின் வெள்ளிய பூக்களாலாகிய மாலையுடன் இணைந்த, தண் செங்கழுநீர்த் தாது விரி பிணையல் - குளிர்ந்த செங்கழுநீரின் தாது விரிந்த இதழ்களாற் கட்டிய பிணையலை, கொற்கையம் பெருந் துறை முத்தொடு பூண்டு - கொற்கைத் துறையில் உண்டாய பெரிய முத்தாற் செய்த வடத்துடன் பூண்டு, தெக்கண மலயச் செழுஞ்சேறு ஆடி - தென்றிசைக்கண்ணதாகிய பொதியிலிற் பிறந்த சந்தனத்தின் குழம்பை உடல் முழுதும் பூசி, பொற்கொடி மூதூர்ப் பொழிலாட்டு அமர்ந்தாங்கு - அழகிய கொடி களையுடைய மூதூர்க்கு அயலதாகிய சோலையிடத்து விளையாடும் விளையாட்டை விரும்பி ;

தாணீர்க்குவளை என்பது பாடமாயின், தாளையுடைய நீர்மை யதாகிய குவளை யென்க. விரியல் - மாலை; விரிந்த பூ என்று கொண்டு அதனுடன் செங்கழுநீரிதழைச் சேர்த்துக் கட்டிய பிணையல் என்றுமாம். பிணையல் - மார்பிலிடுவது. தெக்கணம்; வடசொற்றிரிபு. ஆங்கு; அசை. அடைச்சிப் பூண்டு ஆடி அமர்ந்து என்க. இது நண்பகற் பொழுது கழிக்குமாறு கூறியது.