4. ஊர்காண் காதை





90




95

கரத்தப் பூம்பட் டரைமிசை யுடீஇக்
குரற்றலைக் கூந்தற் குடசம் பொருந்திச்
சிறுமலைச் சிலம்பிற் செங்கூ தாளமொடு
நறுமலர்க் குறிஞ்சி நாண்மலர் வேய்ந்து
குங்கும வருணங் கொங்கையி னிழைத்துச்
செங்கொடு வேரிச் செழும்பூம் பிணையல்
சிந்துரச் சுண்ணஞ் சேர்ந்த மேனியில்
அந்துகிர்க் கோவை அணியொடு பூண்டு
மலைச்சிற கரிந்த வச்சிர வேந்தற்குக்
கலிகெழு கூடற் செவ்வணி காட்டக்
காரர சாளன் வாடையொடு வரூஉம்
கால மன்றியும் நூலோர் சிறப்பின



86
உரை
97

       அரத்தப் பூம்பட்டு அரைமிசை உடீஇ - அங்ஙனம் சேக்கைமேலிருந்து பூத்தொழிலையுடைய செம்பட்டை அரை யின்மீதே உடுத்தி, குரல் தலைக் கூந்தல் குடசம் பொருந்தி - தலையிடத்துக் கொத்தாகவுள்ள கூந்தலில் வெட்பாலைப் பூவை முடித்து, சிறுமலைச் சிலம்பிற் செங்கூதாளமொடு நறுமலர்க் குறிஞ்சி நாள்மலர் வேய்ந்து - சிறுமலையெனப் பெயரிய மலையிற் பூத்த செந்நறுந்தாளிப் பூவுடனே நறிய மலரையுடைய குறிஞ்சியின் புதிய பூவைச் சூடி, குங்கும வருணம் கொங்கையின் இழைத்து - குங்குமம் போலும் நிறத்தையுடைய செஞ் சந்தனத்தைக் கொங்கையில் எழுதி, செங்கொடு வேரிச் செழும் பூம்பிணையல் - செங்கொடு வேரியின் வளவிய பூவாற் கட்டப்பட்ட பிணையலை, சிந்துரச் சுண்ணம் சேர்ந்த மேனியில் - சிவந்த சுண்ணம் அப்பிய மார்பிலே, அம் துகிர்க்கோவை அணியொடு பூண்டு - அழகிய பவள வடமாகிய அணியுடன் பூண்டு, மலைச் சிறகு அரிந்த வச்சிர வேந்தற்கு - மலைகளின் சிறகை யரிந்த வச்சிரப் படையினையுடைய இந்திரனுக்கு, கலி கெழு கூடற் செவ்வணி காட்ட - ஆரவாரம் பொருந்திய கூடலிடத்தே தம் செவ்வணியைக் காட்டுமாறு, கார் அரசாளன் வாடையொடு வரூஉம் காலம் அன்றியும் - காரை ஆளும் அரசன் வாடைக் காற்றோடு வரும் காலமும், அக் கால மன்றியும் ;

       அரை - ஆகுபெயரான் மேகலையுமாம். குரல் - பூங்கொத்துமாம். குடசம் - செங்குடசம். நாண்மலர் எனப் பின் வருதலின், நறுமலர்க் குறிஞ்சி என்பதில் முதற்கேற்ற அடையடுத்தது. இழைத்துச் சேர்ந்த மேனியில் பிணையலை அணியொடு பூண்டு என்றியைக்க. செவ்வணி காட்ட என்பதற்குக் கடை கழி மகளிர் எழு வாய்; குடசம், குறிஞ்சி, கொடுவேரி யென்னுமிவை கார் காலத்துப் பூவாதல்கொண்டு காரரசாளனை எழுவாயாக்குவர் அடியார்க்கு நல்லார்; செய்தெ னெச்சங்கள் முடிவு பெறாமையின் அது பொருளன்மையோர்க. கார் - முகில்; காரரசாளன் - கார் காலம் ; 1"இசைத்தலு முரிய வேறிடத் தான" என்பதனால் உயர்திணையாற் கூறினார்; இவ் விதி மேல்வருவனவற்றிற்குங் கொள்க. செவ்வணி காட்டத் துணையாக வருங் கால மென்க. வச்சிர வேந்தன் முகிலுக்குத் தலைவனாகலின் அவற்குச் செவ்வணி காட்டினரென்க. அவர் அரமகளி ரொப்பா ரென்பதுமாம். கூடற் செவ்வணி ; வேறு பொருளுந் தோன்ற நின்றது. காலமும் அஃதன்றியும் எனப் பிரிக்க.

1 தொல், சொல். 59.