|
100 |
கால மன்றியும் நூலோர் சிறப்பின்
முகில்தோய் மாடத் தகில்தரு விறகின்
மடவரல் மகளிர் தடவுநெருப் பமர்ந்து
நறுஞ்சாந் தகலத்து நம்பியர் தம்மொடு
குறுங்கண் அடைக்குங் கூதிர்க் காலையும்
|
|
நூலோர்
சிறப்பின் - சிற்ப நூல் வல்லோராற் சிறப்புறச் செய்யப்பட்ட, முகில் தோய் மாடத்து
- மேகம் தவழும்படி உயர்ந்த மாடங்களிலே, அகில் தரு விறகின் - கொண்டுவந்த அகிலாகிய
விறகாலே, மடவரல் மகளிர் - மடப்பம் பொருந்துதலையுடைய மகளிர், தடவு நெருப்பு அமர்ந்து
- இந்தளத்தில் இட்ட தீயினைக் காய்தலை விரும்பி, நறுஞ்சாந்து அகலத்து நம்பியர் தம்மொடு
- நறிய சாந்து பூசிய மார்பினையுடைய மைந்தரோடு கூடி, குறுங்கண் அடைக்கும் கூதிர்க்காலையும்
- குறிய கண்களையுடைய சாளரங்களை அடைக்கும் கூதிராகிய காலமும் ;
நம்பியர் - காதலஞ் செல்வர். குறுங்கண்;
ஆகுபெயர். தடவு - இந்தளம்; தூபமுட்டி. |
|