4. ஊர்காண் காதை




105

வளமனை மகளிரும் மைந்தரும் விரும்பி
இளநிலா முன்றிலின் இளவெயில் நுகர
விரிகதிர் மண்டிலந் தெற்கேர்பு வெண்மழை
அரிதல் தோன்றும் அச்சிரக் காலையும்



102
உரை
105

       வள மனை மகளிரும் மைந்தரும் - செல்வ மிக்க மனையிடத்து மகளிரும் மைந்தரும், விரும்பி இள நிலா முன்றிலின் இளவெயில் நுகர - இளநிலாவை நுகர்தற்குரிய முற்றத்தி லிருந்து இளவெயிலை விரும்பி நுகரும்படி, விரிகதிர் மண்டிலம் தெற்கு ஏர்பு - விரிந்த கதிரையுடைய ஞாயிற்று மண்டிலம் தெற்கே எழுந்து இயங்குதலானே, வெண் மழை அரிதில் தோன்றும் அச்சிரக்காலையும் - வெண்முகில் அரிதாகத் தோன்றும் முன்பனிக் காலமும் எவ்விடத்துள்ளன ;

வளமனை நிலா முன்றில் என்றியைத்தலுமாம். இளநிலா - மாலைப் பொழுதின் நிலா ; சுதைநிலா என முன்றிற்கு அடையாக் கலுமாம். தெற்கு - மிதுனவீதி ; வானிலே கோட்கள் இயங்கும் நெறிகள் மேடவீதி, இடபவீதி, மிதுனவீதி, என மூன்றாகப் பகுக்கப்பட்டுள்ளன ; பதினொன்றாம் பரிபாட்டுள் 1 ''எரிசடை யெழில் வேழம் தலையெனக் கீழிருந்து, தெருவிடைப் படுத்தமூன் றொன்பதிற் றிருக்கையுள்'' என வருதல் காண்க. ஏர்பு - எழுதலான் எனத் திரிக்க. எவ்விடத்துள்ளன என்று ஒரு சொல் வருவிக்க.

1 பரி 11. 2 - 3.