|
110 |
வங்க ஈட்டத்துத் தொண்டியோ ரிட்ட
அகிலுந் துகிலும் ஆரமும் வாசமும்
தொகுகருப் பூரமுஞ் சுமந்துடன் வந்த
கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல்
வெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும்
பங்குனி முயக்கத்துப் பனியர சியாண்டுளன்
|
|
ஓங்கு
இரும்பரப்பின் - மிகப் பெரிய கடலின் கணுள்ள, வங்க ஈட்டத்து - நாவாயின் திரளாலே,
தொண்டியோர் இட்ட - தொண்டி யென்னும் பதியிலுள்ள அரசர் திறையாக விட்ட, அகிலும்
துகிலும் ஆரமும் வாசமும் தொகு கருப்பூரமும் சுமந்து உடன்வந்த - அகில் பட்டுசந்தனம் வாசம்
கருப்பூரம் என்னும் இவற்றின் மணத்தினை ஒருங்கு சுமந்து வந்த, கொண்டலொடு புகுந்து கோமகன்
கூடல் - கீழ் காற்றோடு அரசனது கூடற்கட் புகுந்து, வெங்கண் நெடுவேள் வில் விழாக் காணும்
- காமனது கொடிய வில் வெற்றி பொருந்திய விழாவினைக் காணும், பங்குனி முயக்கத்துப்
பனியரசு யாண்டு உளன் - பங்குனித் திங்கள் ஈறாகப் பொருந்திய பின்பனிக் காலமாகிய
அரசன் எவ்விடத்துள்ளான்;
பரப்பு
- பரவை ; கடல். தொண்டி - சோணாட்டுக் கடற்கரைக் கண்ணதோர் பதி யென்பது கொண்டலொடு
புகுந்து என்பதனாற் பெறப்படும் ; சங்கச் செய்யுட்கள் பலவற்றிற் கூறப்படும் சேரர் கடற்றுறைப்
பட்டினமாகிய தொண்டி வேறு, இது வேறு என்பதறிக. தொண்டியோர் - சோழ குலத்தோர். கொண்டல்
- கீழ்க் காற்று. கொண்டலொடு புகுந்து காணும் பனியரசென்க. துகில் - பட்டுவர்க்கம்;
வாசமூட்டப் பெற்றமையால் இவற்றுடன் ஒதப் பட்டது.
[அடி.
இனி, தொகு என்பதனை இறுதி விளக்காகக் கொண்டு பொருளுரைக்க. உரைக்குமாறு ;-- அகில்
; அருமணவன் தக்கோலி கிடாரவன் காரகில் என்று சொல்லப்பட்ட பலவகைத்தாய தொகுதியும்,
துகில் ; கோசிகம் பீதகம் பச்சிலை அரத்தம் நுண்டுகில் சுண்ணம் வடகம் பஞ்சு இரட்டு
பாடகம் கோங்கலர் கோபம் சித்திரக்கம்மி குருதி கரியல் பேடகம் பரியட்டக்காசு வேதங்கம்
புங்கர்க் காழகம் சில்லிகை தூரியம் பங்கம் தத்தியம் வண்ணடை கவற்றுமடி நூல்யாப்பு
திருக்கு தேவாங்கு பொன்னெழுத்து குச்சரி தேவகிரி காத்தூலம் இறஞ்சி வெண்பொத்தி செம்பொத்தி
பணிப்பொத்தி யென்று சொல்லப்பட்ட பலவகைத்தாகிய தொகுதியும், ஆரம் ; மலையாரம்
தீமுரன்பச்சை கிழான்பச்சை பச்சைவெட்டை அரிசந்தனம்; வேரச்சுக்கொடி யென்று சொல்லப்பட்ட
பலவகைத்தாகிய தொகுதியும், வாசம் ; அம்பர் எச்சம் கத்தூரி சவாது சாந்து குங்குமம்
பனிநீர் புழுகு தக்கோலம் நாகப்பூ இலவங்கம் சாதிக்காய் வசுவாசி நிரியாசம் தைலம்
என்று சொல்லப்பட்ட பலவகைத்தாகிய தொகுதியும், கருப்பூரம் : மலைச்சரக்கு கலை அடைவுசரக்கு
மார்பு இளமார்பு ஆரூர்க்கால் கையொட்டுக்கால் மார்ப்பற்று வராசரன் குமடெறிவான் உருக்குருக்கு
வாறோசு சூடன் சீனச்சூடன் என்று பெயர் கூறப்பட்ட பலவகைத்தாகிய தொகுதியும் எனத் தொகுத்தும்
விரித்தும் பொருளுரைக்க.] |
|