4. ஊர்காண் காதை

120




125

கன்றம ராயமொடு களிற்றினம் நடுங்க
என்றூழ் நின்ற குன்றுகெழு நன்னாட்டுக்
காடுதீப் பிறப்பக் கனையெரி பொத்திக்
கோடையொடு புகுந்து கூட லாண்ட
வேனில் வேந்தன் வேற்றுப்புலம் படர
ஒசனிக் கின்ற உறுவெயிற் கடைநாள



120
உரை
125

       கன்று அமர் ஆயமொடு களிற்றினம் நடுங்க - கன்றுகள் விரும்பிய பிடியின் கூட்டத்தோடு அவற்றைப் புரக்கும் களிற்றினமும் நடுங்கும்படி, என்றூழ் நின்ற குன்று கெழு நன் னாட்டு - வெயில் நிலைபெற்ற நல்ல மலைசார்ந்த நாட்டின், காடு தீப்பிறப்பக் கனை எரி பொத்தி - காடுமுழுதும் தீயுண்டாக முழங்கும் அழலை மூட்டி, கோடையொடு புகுந்து - மேல் காற்றோடு வந்து புகுந்து, கூடல் ஆண்ட வேனில் வேந்தன் - கூடலை ஆட்சி செய்த வேனிலாகிய அரசன், வேற்றுப்புலம் படர ஓசனிக்கின்ற - வேற்றுப் புலங்கட்குச் செல்லுமாறு முயல் கின்ற, உறுவெயில் கடைநாள் - மிக்க வெயிலையுடைய வேனிலின் கடை நாளில்;

       என்றூழ் நீடிய என்பதும், பொத்திய என்பதும் அரும்பதவுரை யாசிரியர் கொண்ட பாடம். கனை - செறிவுமாம். பொத்தி - மூட்டி. ஓசனித்தல் - போதற்கு ஒருப்பட்டு முயலுதல் ; "1உடைதிரை முத்தஞ் சிந்த வோசனிக் கின்ற வன்னம்'' என்பது காண்க. அவ்விடத்திருந்தும் அகல வென்பார் 'வேற்றுப் புலம்படர' என்றார்; "ஓரோர் தேயங்கட்கு ஓரொரு காலம் மாறி நிகழ்தலின் வேற்றுப் புலம் படர வென்றார்" என்னும் அடியார்க்கு நல்லாருரை தமிழ் கூறு நல்லுலகத்திற்குப் பொருந்துவதன்று.

1 சீவக, 2652.