|
130 |
வையமுஞ் சிவிகையும் மணிக்கால்
அமளியும்
உய்யா னத்தின் உறுதுணை மகிழ்ச்சியும்
சாமரைக் கவரியுந் தமனிய அடைப்பையும்
கூர்நுனை வாளுங் கோமகன் கொடுப்பப்
பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கைப்
பொற்றொடி மடந்தையர் புதுமணம் புணர்ந்து
|
|
வையமும்-கூடாரப்
பண்டியும், சிவிகையும்-பல்லக்கும், மணிக்கால் அமளியும், மணிகளிழைத்த கால்களையுடைய
சேக்கையும், உய்யானத்தின் உறுதுணை மகிழ்ச்சியும் - நீராவிச் சோலையிலே சேவிப்பாருடனிருந்து
புதுமை காண்டலும், சாமரைக் கவரியும் - சாமரையாகிய கவரியும், தமனிய அடைப்பையும் -
பொன்னாற் செய்த வெற்றிலைப் பெட்டியும், கூர் நுனைவாளும் - கூரிய முனையையுடைய வாளும்,
தம் கோமகன் கொடுப்ப - தம் அரசன் கொடுக்க, பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கை -
அங்ஙனம் பெற்ற வரிசையாகிய செல்வம் எக்காலத்தும் மாறாத. பொற்றொடி மடந்தையர்
புதுமணம் புணர்ந்து - பொன்வளை யணிந்த மகளிர் புதிய மணத்தினைப் பொருந்தி ;
உய்யானம் - அரசர் விளையாடும் காவற்
சோலை. உறுதுணை மகிழ்ச்சி என்பதற்கு உற்ற துணைவைாகிய அரசனோடு மேவி மெய் தொட்டு விளையாடு
மகிழ்ச்சி யென்றுரைப்பர் அடியார்க்கு நல்லார். சாமரைக் கவரி - இருபெயரொட்டு. அடைப்பை
- வெற்றிலைப்பை (பெட்டி) ; அடை - வெற்றிலை. வையம் முதலியன ஏறிச் செல்லுதலும், உய்யானத்தில்
விளையாடுதலும், சாமரை வீசப் பெறுதலும், அடைப்பை பிடித்து இடப் பெறுதலும், வாள் ஏந்தப்
பெறுதலும் அரசன்பால் வரிசையாகப் பெற்றவ ரென்க. கொழுநரொடு புது மணம் புணர்ந்தென்று
கூட்டுக. புதுமணம் புணர்ந்தென்பதற்கு நாடோறும் புதியாரோடு மணம் புணர்ந்தென்றுரைப்பாருமுளர்.
|
|