|
135
140
145 |
பொறிவரி வண்டினம் புல்லுவழி அன்றியும்
நறுமலர் மாலையின் வறிதிடங் கடிந்தாங்
கிலவிதழ்ச் செவ்வாய் இளமுத் தரும்பப்
புலவிக் காலத்துப் போற்றா துரைத்த
காவியங் கண்ணார் கட்டுரை யெட்டுக்கும்
நாவொடு நவிலா நகைபடு கிளவியும்
அஞ்செங் கழுநீர் அரும்பவிழ்த் தன்ன
செங்கயல் நெடுங்கட் செழுங்கடைப் பூசலும்
கொலைவிற் புருவத்துக் கொழுங்கடை சுருளத்
திலகச் சிறுநுதல் அரும்பிய வியரும்
செவ்வி பார்க்குஞ் செழுங்குடிச் செல்வரொடு
வையங் காவலர் மகிழ்தரும் வீதியும்
|
|
பொறிவரி
வண்டினம் புல்லுவழி அன்றியும் - வரி பாடும் பொறியையுடைய வண்டினத்தை அவை பொருந்து மிடத்தினன்றியும்,
நறுமலர் மாலையின் வறிதிடம் கடிந்தாங்கு - நறிய பூமாலையாலே அவை பொருந்தாத இடத்திற்
கடிந்து இலவு இதழ்ச் செவ்வாய் இளமுத்து அரும்ப இலவிதழ் போ லும் சிவந்த வாயின் மீதே
இளமுத்துப் போலும் பற்கள் தோன்ற முறுவலித்து, புலவிக் காலத்துப் போற்றாது உரைத்த-
ஊடற் காலத்துப் பாதுகாவாது கூறிய, காவியங் கண்ணார் கட்டுரை - நீலோற்பலம் போன்ற
கண்ணினையுடையாரது புலவிப் பொருள் பொதிந்த உரையாகிய, எட்டுக்கு நாவொடு நவிலா நகைபடு
கிளவியும் - எண்வகை யிடத்திற் பொருந்தி நாவால் நவிலப்படாத நகை தோன்றுங் கிளவியும்,
அம் செங்கழு நீர் அரும்பு அவிழ்த்தன்ன - அழகிய செங்கழுநீரின் அரும்பை நெகிழ்த்துப்
பார்த்தாலொத்த, செங்கயல் நெடுங்கண் செழுங் கடைப் பூசலும் - சிவந்த கயலினை யொத்த
நீண்ட கண்ணின் கடைச்சிவப்பாற் செய்த பூசலும், கொலை விற் புருவத்துக் கொழுங்கடை
சுருள - கொலைத்தொழில் புரியும் வில்லை யொத்த புருவத்தின் அழகிய கோடிகள் உள் வளைய,
திலகச் சிறு நுதல் அரும்பிய வியரும் - திலகமணிந்த சிறிய நெற்றியில் அரும்பிய வியரும்,
செவ்வி பார்க்கும் செழுங்குடிச் செல்வ ரொடு - தீருஞ் செவ்வி பார்த்து வருந்தும் வளமிக்க
குடிப் பிறந்த செல்வரோடே, வையம் காவலர் மகிழ்தரு வீதியும் - நிலத்தினைப் புரக்கும்
அரசரும் விரும்பும் வீதியும்;
வண்டினம்
புல்லுதல் - இதழில் மறையும் விழியைப் பூவிதழில் மறையும் தமதினமெனக் கருதிச் சேர்தல்.
மாலை - புணர்ச்சியாற் பரிந்த மாலை. மதுவுண்ட மயக்கத்தால் வண்டு மொய்க்காத இடத்
தையும் மாலையாற் கடிந்தாரென்க. எட்டு - நெஞ்சு முதலாய எண் வகையிடம். கட்டுரை யெடுக்குநர்
என்று பாடங்கொண்டு, வார்த்தை சொல்லப்புகுகின்றவர் என்றுரைப்பர் அரும்பதவுரை யாசிரியர்.
காவியங்கண்ணார் உரைத்த கட்டுரையாகிய கிளவியும் எனக் கூட்டுக. கிளவியும் பூசலும் வியரும்
புலவியா லுண்டாயவை. தீருஞ் செவ்வியென ஒரு சொல் வருவித்துரைக்க, செழுங்குடிச் செல்வர்
- அரசரல்லா ஏனையோர். வண்டு மூசுதலும் மாலை கொண்டு மயக்கத்தாற் பிறிதிடங் கடிதலும்
"1ஒருத்தி, கணங்கொண் டவை மூசக்
கையாற்றான் பூண்ட, மணங்கமழ் கோதை பரிவுகொண்டோச்சி" எனவும், "ஒருத்தி, யிறந்த
களியா னிதழ்மறைந்த கண்ணள், பறந்தவை மூசக் கடிவாள் கடியும், இடந்தேற்றாள் சோர்ந்தனள்
கை" எனவும் கலித்தொகையுட் கூறப்படுதல் ஈண்டறிந் தின் புறற்பாலது. |
1
கலி, 92.
|
|