4. ஊர்காண் காதை

சுடுமண் ஏறா வடுநீங்கு சிறப்பின்
முடியர சொடுங்குங் கடிமனை வாழ்க்கை



146
உரை
147

        சுடுமண் ஏறா - செங்கல் தலையில் ஏறப்படாத, வடு நீங்கு சிறப்பின் - குடிப்பழி நீங்கிய சிறப்பினையுடைய, முடி அரசு ஒடுங்கும் கடிமனை வாழ்க்கை - முடிசூடிய அரசரும் பிற ரறியாது தங்கியிருத்தற்கேற்ற விளக்கமுற்ற மனையில் வாழ் தலையுடைய;

        பதியிலாரிற் குடிக்குற்றப்பட்டாரை ஏழு செங்கற் சுமத்தி ஊரைச் சுற்றிவரச் செய்து புறத்து விடுதல் மரபாகலின், அங்ஙனம் குற்றப்படாதவ ரென்பார் "சுடும ணேறா வடுநீங்கு சிறப்பின்" என்றார் ; இதனை, 1"மற்றவன் றன்னால் மணிமே கலைதனைப், பொற்றேர்க் கொண்டு போதே னாகிற், சுடும ணேற்றி யாங்குஞ்சூழ் போகி, வடு வொடு வாழு மடந்தையர் தம்மோ, டனையே னாகி யரங்கக் கூத்தியர் மனையகம் புகாஅ மரபினள்" என, மணிமேகலையிற் சித்திராபதி வஞ் சினங் கூறுதலானு மறிக ; இனி, ஓடுவேயாது பொற்றகடு வேய்ந்த மனை யென்றலுமாம். முடியா சொடுங்கும் என்றது மனையின் பெருமை கூறியபடி.

1 மணி: 18: 31--6.