4. ஊர்காண் காதை





165

அரும்பெறல் அறிவும் பெரும்பிறி தாகத்
தவத்தோ ராயினுந் தகைமலர் வண்டின்
நகைப்பதம் பார்க்கும் இளையோ ராயினும்
காம விருந்தின் மடவோ ராயினும்
ஏம வைகல் இன்றுயில் வதியும்
பண்ணும் கிளையும் பழித்த தீஞ்சொல்
எண்ணென் கலையோர் இருபெரு வீதியும்



161
உரை
167

        அரும்பெறல் அறிவும் பெரும் பிறிதாக - பெறுதற் கரிய தமதறிவும் கெட்டொழிய, தவத்தோர் ஆயினும் - தவ நெறியில் முயல்வோராயினும், தகைமலர் வண்டின் - அழகிய மலர்தோறுஞ் சென்று அவற்றின் தேனைப் பருகும் வண்டு போல, நகைப்பதம் பார்க்கும் இளையோர் ஆயினும் - அவர் காமக் குறிப்பு நிகழ நகைக்கும் நகையின் செவ்வி பார்த்துப் புதுவோரைப் புணரும் காமுகராயினும், காமவிருந்தின் மடவோர் ஆயினும் - காமவின்பத்தை முன்பு நுகர்ந்தறியாத புதியராயினும், ஏம வைகல் இன் துயில் வதியும் - நாடோறும் புணர்ச்சியில் மயங்கி இனிய துயிலிலே கிடக்கும், பண்ணும் கிளையும் பழித்த தீஞ்சொல் - பண்ணினையும் கிளியினையும் பழித்த இனிய சொல்லையுடைய. எண்ணெண் கலையோர் இரு பெரு வீதியும் - தமக்கு வகுக்கப்பட்ட அறுபத்து நான்கு கலைகளை வல்ல பதியிலாருடைய இருவகைப்பட்ட வீதிகளும் ;

        பெரும் பிறிதாதல் - செயலற்றொழிதல். வண்டாகிய உவமத் தால் அது முன் நுகர்ந்த மலரைத் துறந்து செல்லுதல் போல் இளையோர் முன்பு நுகர்ந்த மகளிரைத் துறந்து செல்லுதலுங் கொள்க. ஏமம் - மயக்கம், கிளை - கிள்ளை. எண்ணெண் கலை - யாழ்வாசினை முதலிய அறுபத்து நான்கு கலைகள் ; நாடகக் கணிகையர்க்கு இவை உரிய வென்பது, 1"எண்ணாண் கிரட்டி யிருங்கலை பயின்ற, பண்ணியன் மடந்தையர் பயங்கெழு வீதி" எனப் பின்னரும் கூறப்படுகின் றது ; 2"யாழ்முத லாக அறுபத் தொருநான், கேரிள மகளிர்க் கியற்கையென் றெண்ணிக், கலையுற வகுத்த காமக் கேள்வி" என்றார் பிறரும் இருபெருவீதி - சிறுதனம் பெருந்தனம் பெறுவார் வீதி யென்பார்.

        இனி, பண்ணும் கிளையும் பழித்த என்பதற்குப் பண்களையும் அவற்றின் திறங்களையும் பழித்த என்றலுமாம்.

1. சிலப், 22 : 138-9. 2. பெருங். 1. 35 : 84-6.