4. ஊர்காண் காதை



170




175

வையமும் பாண்டிலும் மணித்தேர்க் கொடுஞ்சியும்
மெய்புகு கவசமும் வீழ்மணித் தோட்டியும்
அதள்புனை அரணமும் அரியா யோகமும்
வளைதரு குழியமும் வால்வெண் கவரியும்
ஏனப் படமும் கிடுகின் படமும்
கானப் படமும் காழூன்று கடிகையும்
செம்பிற் செய்நவும் கஞ்சத் தொழிலவும்
வம்பின் முடிநவும் மாலையிற் புனைநவும்
வேதினத் துப்பவும் கோடுகடை தொழிலவும்
புகையவும் சாந்தவும் பூவிற் புனைநவும்
வகைதெரி வறியா வளந்தலை மயங்கிய
அரசுவிழை திருவின் அங்காடி வீதியும்



168
உரை
179

        வையமும் - கொல்லாப் பண்டியும், பாண்டிலும் - இரண்டுருளையுடைய சகடமும், மணித் தேர்க் கொடிஞ்சியும் - அழகிய தேர் மொட்டும், மெய் புகு கவசமும் - மெய்புகுதற் கிடமாகிய கவசமும், வீழ்மணித் தோட்டியும் - விரும்பப்படும் மணிகள் பதித்த அங்குசமும், அதள் புனை அரணமும். - தோலாற் செய்யப்பட்ட கைத்தளமும், அரியா யோகமும் - அரைப்பட்டி கையும், வளைதரு குழியமும் - வளைதடியும், வால் வெண்கவரியும் - மிகவெள்ளிய சாமரையும், ஏனப் படமும் - பன்றிமுகக் கடகும், கிடுகின்படமும் - சிறுகடகும், கானப்படமும் - காடெழுதின கடகும், காழ் ஊன்று கடிகையும் - குத்துக் கோல்களும், செம்பிற் செய்நவும் - செம்பாற் செய்தனவும், கஞ்சத் தொழி லவும் - வெண்கலத்தாற் செய்தனவும், வம்பின் முடிநவும் - கயிற்றால் முடிவனவும், மாலையின் புனைநவும் - கிடையால் மாலையாகப் புனைவனவும், வேதினத் துப்பவும் - ஈர்வாள் முதலிய கருவிகளும், கோடு கடை தொழிலவும் - தந்தத்தைக் கடைந்து செய்த தொழிலையுடையவைகளும், புகையவும் - வாசப் புகைக்கு உறுப்பாயுள்ளனவும், சாந்தவும் - மயிர்ச்சாந்துக்கு உறுப்பாயுள்ளனவும், பூவிற் புனைநவும் - பூவாற் புனையப்படும் மாலை களும் ஆகிய, வகை தெரிவு அறியா - வேறுபாடு தெரிதற்கரிய, வளம் தலைமயங்கிய - இவ் வளங்கள் கலந்து கிடக்கின்ற, அரசு விழை திருவின் அங்காடி வீதியும் - அரசரும் காணவிரும்பும் செல்வத்தையுடைய அங்காடித் தெருவும் ;

அரியா யோகம் - பிணியைக் கெடுக்கும் மருந்து என்றும், குழியம் - வாசவுருண்டை யென்றும், கிடுகின்படம் - தோற்கடகு என்றும், கோடுகடைதொழில் - ஆனைக்கோடு முதலியவற்றைக் கடை யும் தொழிற்குரிய கருவிகள் என்றும் கூறுவாருமுளர். வால்வெண்: ஒரு பொருட் பன்மொழி. ஏனப்படம் முதலிய மூன்றும் கேடக வகைகள். வம்பின் முடிந - கயிற்றினாற் புதுமையுற முடியப்படுவன ; அல்லிக்கயிறு, குசைக்கயிறு முதலியன. வேதினம்-ஈர்வாள். துப்பு - கருவி. புகைய - நேர்கட்டி செந்தேன் நிரியாசம் பச்சிலை ஆரம் என்னும் புகையுறுப்புக்கள், சாந்த - மெய்யிற்பூசும் சாந்தின் உறுப்புக்களுமாம்.