|
180 |
காக பாதமும் களங்கமும் விந்துவும்
ஏகையும் நீங்கி இயல்பிற் குன்றா
நூலவர் நொடிந்த நுழைநுண் கோடி
நால்வகை வருணத்து நலங்கேழ் ஒளியவும்
|
|
காகபாதமும்
களங்கமும் விந்துவும் ஏகையும் நீங்கி - குற்றம் பன்னிரண்டனுள் மிகவும் தீயனவாகிய காகபாதம்
களங்கம் விந்து இரேகை யென்னும் நான்கும் நீங்கி, இயல்பிற் குன்றா - குணங்களிற் குன்றாதனவாகி,
நூலவர் நொடிந்த - நூலோராற் கூறப்பட்ட, நுழை நுண்கோடி - மிக்க நுண்மையுடைய கோடியினையும்,
நால்வகை வருணத்து - நால்வகை நிறத்தினையும், நலம் கேழ் ஒளியவும் - நன்மை பொருந்திய
ஒளியையும் உடைய வயிரச் சாதியும் ;
விந்து- புள்ளி. ஏகை - இரேகை யென்பதன் சிதைவு. நூலவர் நொடிந்த என்பதனை எல்லாவற்றொடுங்
கூட்டுக. நுழைநுண் - மிகக்கூர்த்த ; ஒரு பொருளிரு சொல். ஒளி - இந்திரவிற் போலும் ஒளியென்பர்.
குற்றம் முதலியவற்றைப் பின்வரும் பழைய நூற்பாக்களானறிக. "சரைமலங் கீற்றுச் சப்படி
பிளத்தல், துளைகரி விந்து காக பாதம், இருத்துக் கோடிக ளிலாதன முரிதல், தாரை மழுங்கல்
தன்னோடு, ஈராறும் வயிரத் திழிபென மொழிப," "பலகை யெட்டுங் கோண மாறும், இலகிய
தாரையுஞ் சுத்தியுந் தராசமும், ஐந்துங் குணமென் றறைந்தனர் புலவர், இந்திர சாபத் திகலொளி
பெறினே," "காக பாதம் நாகங் கொல்லும்," "மலம்பிரி யாதது நிலந்தரு கிளைகெடும்,"
"விந்து சிந்தையிற் சந்தா பந்தரும்," "கீற்று வரலினை யேற்றவர் மாய்வர்."
|
|