4. ஊர்காண் காதை

பதுமமும் நீலமும் விந்தமும் படிதமும்
விதிமுறை பிழையா விளங்கிய சாதியும



186
உரை
187

        பதுமமும் நீலமும் விந்தமும் படிதமும் விதிமுறை பிழையா விளங்கிய சாதியும் - நூல்களில் விதித்த முறையிற் பிறழாமல் விளங்கிய பதுமம் நீலம் விந்தம் படிதம் என்னும் நால்வகைச் சாதி மாணிக்க வருக்கமும் ;

        விதிமுறை பிழையா எனவே, பிறப்பிடம், வருணம், பெயர் குணம், குற்றம், நிறம், விலை, பத்தி என்னுமிவையும், பிறவும் அடங்கின; என்னை ? "மாணிக்கத்தியல் வகுக்குங் காலைச், சமனொளி சூழ்ந்த வொருநான் கிடமும், நால்வகை வருணமும் நவின்றவிப் பெயரும், பன்னிரு குணமும் பதினறு குற்றமும், இருபத் தெண்வகை இலங்கிய நிறமும், மருவிய விலையும் பத்தி பாய்தலும், இவையென மொழிப வியல்புணர்ந் தோரே" என்றாராகலின். இவற்றுள், பதுமம் - பதுமராகம் எனவும் சாதுரங்கம் எனவும் படும். நீலம் - நீல கந்தி எனவும் சௌகந்தி எனவும் படும். விந்தம் - குருவிந்தம் எனவும் இரத்தவிந்து எனவும் படும். படிதம் - கோவாங்கு எனப்படும். இவற்றின் நிறங்களை, "தாமரை கழுநீர் சாதகப் புட்கண், கோப மின்மினி கொடுங்கதிர் விளக்கு, மாதுளைப் பூவிதை வன்னி யீரைந்தும், ஓதுசா துரங்க வொளியா கும்மே," திலக முலோத்தி ரஞ் செம்பருத் திப்பூக், கவிர்மலர் குன்றி முயலுதி ரம்மே, சிந்துரங்குக்கிற் கண்ணென வெட்டும், எண்ணிய குருவிந்த மன்னிய நிறமே," "கோகிலக்கண் செம்பஞ்சு கொய்ம்மலர்ப் பலாசம், அசோக பல்லவ மணிமலர்க் குவளை, இலவத் தலர்க ளென்றாறு குணமும், சௌகந் திக்குச் சாற்றிய நிறனே," "கோவைநற் செங்கல் குராமலர் மஞ்சளெனக், கூறிய நான்குங் கோவாங்கு நிறனே" என்பவற்றானறிக.