4. ஊர்காண் காதை



210

நிறைக்கோல் துலாத்தர் பறைக்கட் பராரையர்
அம்பண வளவையர் எங்கணுந் திரிதரக்
கால மன்றியுங் கருங்கறி மூடையொடு
கூலங் குவித்த கூல வீதியும்



208
உரை
211

       நிறைக்கோல் துலாத்தர் - நிறுக்கும் துலாக்கோலை யுடையராயும், பறைக்கண் பராரையர் - பரிய அரையையும் இரும்பால் வாய் மட்டாகக் கட்டின கண்ணையுமுடைய பறையினையுடையராயும், அம்பண அளவையர் - அளக்கும் மரக்காலையுடையராயும், எங்கணும் திரிதர - தரகு செய்வார் நின்றுழி நில்லாது எவ்விடத்தும் திரியும்படி, காலம் அன்றியும் - எக்காலமும், கருங்கறி மூடையொடு - பெரிய மிளகு பொதியுடனே, கூலம் குவித்த கூல வீதியும் - கூலங்களும் குவித்த கூலக் கடைத்தெருவும் ;

       துலாக்கோல் எனவும், பராரைக்கட் பறை எனவும் மாறுக. பறை - தலை மட்டமாக அளக்கும் ஓர் முகத்தலளவைக் கருவி. அம் பணம் - மரக்கால். மூடையொடு என்னும் உடனிகழ்ச்சியால் பாக்கு முதலிய பொதிகள் கொள்ளலுமாம். கூலமாவன; "நெல்லுப் புல்லு வரகுதினை சாமை, இறுங்கு தோரை யிராகியெண் கூலம்" எனவும், "எள்ளுக் கொள்ளுப் பயறுழுந்தவரை, கடலை துவரை மொச்சை யென்றாங், குடனிவை முதிரைக் கூலத் துணவே" எனவும் ஓதப்பட்ட ஈரெண் வகைப்பொருள்கள்.