|
215 |
பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும்
அந்தியுஞ் சதுக்கமும் ஆவண வீதியும்
மன்றமும் கவலையும் மறுகும் திரிந்து
விசும்பகடு திருகிய வெங்கதிர் நுழையாய்
பசுங்கொடிப் படாகைப் பந்தர் நீழல்
காவலன் பேரூர் கண்டுமகிழ் வெய்திக்
கோவலன் பெயர்ந்தனன் கொடிமதிற் புறத்தென்.
|
|
பால்வேறு
தெரிந்த நால்வேறு தெருவும் - பகுதி வேறு தெரிந்த அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்பார்
இருக்கும் நால் வேறாகிய தெருக்களும், அந்தியும் - முச்சந்தியும், சதுக்கமும் - நாற்சந்தியும்,
ஆவண வீதியும் - கோயிற் கடைத் தெருவும், மன்றமும் - மன்றுகளும், கவலையும் - பல நெறிகள்
கூடின முடுக்குகளும், மறுகும் - குறுந்தெருக்களும், திரிந்து - உலாவி, விசும்பு அகடு திருகிய
வெங்கதிர் நுழையா - வானின் நடுவிலே வெம்மை முறுகியோடும் ஞாயிற்றின் கதிர்கள் நுழையப்படாத,
பசுங் கொடிப் படாகைப் பந்தர் நீழல் - புதிய சிறு கொடியும் பெருங்கொடியுமென்னும் இவற்றின்
பந்தர் நிழலிலே, காவலன் பேரூர் கண்டு மகிழ்வு எய்தி - பாண்டி மன்னனது பெரிய நகரினைக்
கண்டு மகிழ்ச்சியுற்று, கோவலன் பெயர்ந்தனன் கொடிமதிற் புறத்தென் - கோவலன் கொடிகளை
யுடைய மதிற்புறத்து மீண்டு போந்தான் என்க.
புள்ளெழுந்தார்ப்ப மண்டிலம் துயிலெடுப்ப
இயம்பச் சென்று ஏத்திச் சிறுமையுற்றேன் என்றலும், கவுந்தியடிகள், அனையையு மல்லை ;
பிரியா வாழ்க்கை பெற்றனையன்றே ; வருந்தாதேகிப் போதீங் கென்றலும் மருங்கிற்போகி
அயிராது புக்கு மகிழ்தரு வீதியும் இரு பெரு வீதியும் அங்காடி வீதியும் பயங்கெழு வீதியும்
நலங்கிளர் வீதியும் அறுவை வீதியும் கூலவீதியும் நால்வேறு தெருவும் அந்தியும் சதுக்கமும்
ஆவணவீதியும் மன்றமும் கவலையும் மறுகும் ஆகிய இவ்விடங்களில் பந்தர் நீழலில் திரிந்து
காவலன் பேரூரைக் கோவலன் கண்டு மகிழ்வெய்திப் பெயர்ந்தான் என வினைமுடிக்க.
இது
நிலைமண்டில வாசிரியப்பா.
ஊர்காண்
காதை முற்றிற்று. |
|