4. ஊர்காண் காதை

அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும்



11
உரை
11

       அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும் - அறநெறிக் கண்ணே நின்று விளக்கமுற்ற முனிவர்களுடைய பள்ளிகளும்;

       
இனி, இவ்வடிக்கு அடியார்க்கு நல்லார் விரித்துரைக்கும் பொருள் வருமாறு :-- "அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும் - அறமும் அதன்றுறைகளும் விளங்குவதற்குக் காரணமாகிய அறவோர்களுடைய இருப்பிடங்களும் ; ஈண்டுப் பள்ளி என்றது, அவ்விடங்களை. அறத்துறை - அறமும் அறத்தின் துறையுமென உம்மைத் தொகை. அறமாவது இருவகைத்து ; இல்லறமும் துறவறமும் என. அவற்றுள் இல்லறமென்பது கற்புடை மனைவியோடு இல்லின்கணிருந்து செய்யும் அறம். அதன் றுறையாவன : தன்னை யொழிந்த மூவர்க்கும், துறந்தார்க்கும், துவ்வாதவர்க்கும், இறந்தார்க்கும், தேவர்க்கும், முனிவர்க்கும், விருந்தினர்க்கும், சுற்றத்தார்க்கும், பிறர்க்கும் துணையாதலும், வேள்வி செய்தலும், சீலங்காத்தல் முதலியனவும், அருளும் அன்பும் உடையனாதலும், பிறவும்.

       
இனித் துறவறமாவது. நாகம் தோலுரித்தாற் போல அகப்பற்றும் புறப்பற்றும் அற்று இந்திரிய வசமறுத்து முற்றத் துறத்தல்.

       
அதன் துறையாவன :-- சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன. அவற்றுள், சரியை அலகிடல் முதலியன ; கிரியை பூசை முதலியன ;

       
யோகம் எண்வகைய; அவை :-- இயமம், நியமம், ஆசனம், வளிநிலை, தொகைநிலை, பொறைநிலை, நினைதல், சமாதி, என்பன ;

       
அவற்றுள், "பொய்கொலை களவே காமம் பொருணசை, இவ்வகை யைந்து மடக்கிய தியமம்" எனவும், "பெற்றதற் குவத்தல் பிழம்புநனி வெறுத்தல், கற்பன கற்றல் கழிகடுந் தூய்மை, பூசனைப் பெரும்பய மாசாற் களித்தலொடு, பயனுடை மரபினி னியமமைந்தே" எனவும், "நிற்ற லிருத்தல் கிடத்தல் நடத்தலென், றொத்த நான்கி னொல்கா நிலைமையொ, டின்பம் பயக்குஞ் சமய முதலிய, வந்தமில் சிறப்பி னாசன மாகும்" எனவும், "உந்தியொடு புணர்ந்த விருவகை வளியுந், தந்த மியக்கந் தடுப்பது வளிநிலை" எனவும், "பொறியுணர் வெல்லாம் புலத்தின் வழாமை, ஒருநிலைப்படுப்பது தொகைநிலை யாமே" எனவும், "மனத்தினை யொருவழி நிறுப்பது பொறைநிலை" எனவும், "நிறுத்திய அம்மன நிலைதெரியாமற், குறித்த பொருளொடு கொளுத்துவது நினைவே" எனவும், "ஆங்ஙனங் குறித்த அம்முதற் பொருளொடு, தான்பிற னாகாத் தகையது சமாதி" எனவும் வருவனவற்றானறிக."