5. அடைக்கலக் காதை


55





60





65





70





75
பிள்ளை நகுலம் பெரும்பிறி தாக
எள்ளிய மனையோள் இனைந்துபின் செல்ல

வடதிசைப் பெயரு மாமறை யாளன்
கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை
வடமொழி வாசகஞ் செய்தநல் லேடு
கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்கெனப்
பீடிகைத் தெருவிற் பெருங்குடி வாணிகர்

மாட மறுகின் மனைதொறு மறுகிக்
கருமக் கழிபலங் கொண்மி னோவெனும்
அருமறை யாட்டியை அணுகக் கூஉய்
யாதுநீ யுற்ற இடர்ஈ தென்னென
மாதர்தா னுற்ற வான்துயர் செப்பி

இப்பொரு ளெழுதிய இதழிது வாங்கிக்
கைப்பொருள் தந்தென் கடுந்துயர் களைகென
அஞ்சல் உன்றன் அருந்துயர் களைகேன்
நெஞ்சுறு துயரம் நீங்குக என்றாங்கு
ஓத்துடை அந்தணர் உரைநூற் கிடக்கையில்

தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத்
தானஞ் செய்தவ டன்றுயர் நீக்கிக்
கானம் போன கணவனைக் கூட்டி
ஒல்காச் செல்வத் துறுபொருள் கொடுத்து
நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ


54
உரை
75

      பிள்ளை நகுலம் பெரும் பிறிது ஆக - தம் பிள்ளையைக் காத்த கீரி தன் மனைவி அடித்தமை காரணமாக இறந்தமையான், எள்ளிய மனையோள் இனைந்துபின் செல்ல வடதிசைப் பெயரும் மா மறையாளன் - வடக்கண் கங்கையாடச் செல்லும் மறையோன் அக் கோறல் காரணமாக இகழ்ந்து ஒதுக்கிய மனைவி வருந்தித் தன் பின்னே வரலான், கடவது அன்று நின் கைத்து ஊண் வாழ்க்கை - நினது கையிடத்ததாகிய உணவை உண்டு வாழும் வாழ்க்கை இனி முறைமையுடையது அன்று, வடமொழி வாசகம் செய்த நல் ஏடு - ஆகலான் வடமொழி வாசகம் எழுதிய நல்ல இவ்வேட்டினை, கடன் அறி மாந்தர் கை நீ கொடுக்கென - உணரத்தகு பொருளை யுணரும் மக்கள் கையகத்து நீ கொடுக்கவெனச் சொல்லிப் போக, பீடிகைத் தெருவின் பெருங்குடி வாணிகர் மாடமறுகின் மனை தொறும் மறுகி - கடைவீதியினும் பெருங்குடி வணிகர் வாழும் மாடங்கள் நிறைந்த மறுகிலும் ஏனையோர் இல்லங்களிலும் சுழன்று திரிந்து, கருமக் கழிபலம் கொண்மினோ எனும் அரு மறையாட்டியை - பாவத்தினைப் போக்கும் பயனைக் கொள்ளுங் கள் என்று கூறிச் செல்லும் பார்ப்பனியை, அணுகக் கூய் - அண்மையில் வரும் வண்ணம் அழைத்து, யாது நீ உற்ற இடர் ஈது என் என - நீ யடைந்த துன்பம் யாது இக் கையின்கண் ஏடு யாது என்று கேட்ப, மாதர் தான் உற்ற வான் துயர் செப்பி - அம் மாது தான் அடைந்த மிக்க துன்பத்தினைக் கூறி, இப் பொருள் எழுதிய இதழ் இது வாங்கி - இச் செய்யுள் எழுதிய இவ் வேட் டினைப் பெற்று, கைப்பொருள் தந்து என் கடுந்துயர் களை கென - கைப்பொருளைக் கொடுத்து எனது கொடிய துயரத் தினை ஒழிப்பாயாக வென்று கூற, அஞ்சல் உன்றன் அருந்துயர் களைகேன் - அஞ்சற்க உனது பொறுத்தற்கரிய துன்பத்தினை யான் போக்குவேன், நெஞ்சுறு துயரம் நீங்குக என்று - உன் உள்ளத்துப் பொருந்தும் இடும்பையை நீக்குக என்று சொல்லி, ஆங்கு ஓத்துடை அந்தணர் உரைநூல் கிடக்கையின் - அப்பொழுதே வேதத்தினையுடைய முனிவர்கள் கூறிய அறநூன் முறையானே, தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்க - கொலைத் தொழில் புரிந்தவளாகிய அப் பார்ப்பனி செய்த பாவம் ஒழியும் வண்ணம், தானம் செய்து அவள்தன் துயர் நீக்கி - தானத்தைச் செய்து அவளுடைய துன்பத்தினைப் போக்கி, கானம் போன கணவனைக் கூட்டி - காட்டு நெறிக்கண் சென்ற அவள் கணவனையும் சேர்த்து, ஒல்காச் செல்வத்து உறுபொருள் கொடுத்து - தளராத செல்வமுடைமையான் மிக்க பொருளினைத் தந்து, நல்வழிப்படுத்த செல்லாச் செல்வ - நன்னெறிப் படுத்திய தொலையாத செல்வமுடையானே ;

      பிள்ளை நகுலம் - கீரிக்குட்டி. 'பிள்ளை நகுலம் பெரும்பிறி தாக' என்றது பார்ப்பனியின் பிள்ளையைக் காத்திருந்த கீரி அவண் பாம் பொன்று வர அதனைக் கொன்று உதிரம் படிந்த வாயுடனே எதிர்வந்த தனைக் கண்ட அப் பார்ப்பனி அக் கீரி தன் குழந்தையைக் கொன்ற தெனக் கருதி அதனைக் கொன்றனள் என்னுங் கதை குறித்து நின்றது. பெரும்பிறிது - இறத்தல். கைத்தூண் வாழ்க்கை - ஒழுக்கத்தின் உண்டு வாழும் வாழ்க்கை எனலுமாம். வாசகம் - செய்யுள் : அதா வது :--"அபரீக்ஷ்ய நகர்த்தவ்யங் கர்த்தவ்யம் ஸுபரீக்ஷிதம், பச் சாத்பவதி ஸந்தாபம் ப்ராஹ்மணீ நகுலம்யதா" என்பதாகும், கட னறிமாந்தர் என்றது மக்கட் பிறப்பின் முறைமையை உணரும் மக்கள் என்றவாறு. கொடுக்கென என்பதன் பின்னர்ப் போகவென ஒரு சொல்வருவிக்க. தெருவினும் மறுகினும் உள்ள மனை எனலும் பொருந்தும். கருமக் கழிபலங் கொண்மின் என்றது கொலைப் பாவம் ஒழியப் பிரிந்த கணவன் வரும் வண்ணம் தானம் செய்தற்குப் பொருள் அளித்தலை ஏற்றுக் கொண்மின் என்றவாறு. 'இப் பொருள்' என்றது பொருட்கிடமாகிய செய்யுளை. ஓத்துடை அந் தணர் - தருமாசனத்தோர் என்க. 'துயர் நீங்க' என்றது துயரத்திற்குக் காரணமாய பாவம் நீங்க என்றபடி.