5. அடைக்கலக் காதை





80





85





90
பத்தினி யொருத்தி படிற்றுரை எய்த
மற்றவள் கணவற்கு வறியோன் ஒருவன்
அறியாக் கரிபொய்த் தறைந்துணும் பூதத்துக்
கறைகெழு பாசத்துக் கையகப் படலும்
பட்டோன் றவ்வை படுதுயர் கண்டு

கட்டிய பாசத்துக் கடிதுசென் றெய்தி
என்னுயிர் கொண்டீங் கிவனுயிர் தாவென
நன்னெடும் பூதம் நல்கா தாகி
நரக னுயிர்க்கு நல்லுயிர் கொண்டு
பரகதி யிழக்கும் பண்பீங் கில்லை

ஒழிகநின் கருத்தென உயிர்முன் புடைப்ப
அழிதரு முள்ளத் தவளொடும் போந்தவன்
சுற்றத் தோர்க்கும் தொடர்புறு கிளைகட்கும்
பற்றிய கிளைஞரின் பசிப்பிணி யறுத்துப்
பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மல்


76
உரை
90

      பத்தினி ஒருத்தி படிற்று உரை எய்த - ஓர் கற்புடை மகள் பொய்ப் பழியினை எய்துதற்கு, மற்று அவள் கணவற்கு வறியோன் ஒருவன் அறியாக் கரி பொய்த்து - அவளுடைய கணவனுக்கு அறிவிலான் ஒருவன் கண்டு தெளியாத சான்று கூறிப் பொய்த்தலான், அறைந்து உணும் பூதத்துக் கறைகெழு பாசத்துக் கை அகப்படலும் - தவ மறைந்து ஒழுகுவோர் முதலிய அறுவகையோரையும் புடைத்துண்ணும் பூதத்தினுடைய கரிய பாசத்தினிடத்து அகப்பட, பட்டோன் தவ்வை படுதுயர் கண்டு - அங்ஙனம் அகப்பட்டோனுடைய தாய் படும் துன்பத்தினை நோக்கி, கட்டிய பாசத்துக் கடிது சென்று எய்தி - அவனைக் கட்டிய பாசத்தினுள் தான் விரைந்து சென்று அடைந்து, என் உயிர்கொண்டு ஈங்கு இவன் உயிர் தா என - இப்பொழுது என்னுடைய உயிரை நீ பெற்றுக்கொண்டு இவனுடைய உயிரைத் தந்திடுவாய் என்று கேட்ப, நல் நெடும் பூதம் நல்காது ஆகி - நல்ல பெரிய பூதம் அவனுயிரைக் கொடாதாய், நரகன் உயிர்க்கு நல் உயிர் கொண்டு பரகதி இழக்கும் பண்பு ஈங்கு இல்லை - கீழோனுடைய உயிரின் பொருட்டு நல்ல உயிரினைக் கொண்டு மேலான நிலையை இழக்குந் தன்மை என்னிடத்து இல்லை, ஒழிக நின் கருத்து என உயிர் முன் புடைப்ப - ஆதலால் நின் எண்ணத்தினை ஒழிப்பாயாக என்று கூறி அவனைத் தன் எதிரே புடைத்து உண்ண, அழிதரும் உள்ளத்து அவளொடும் போந்து - வருந்திய உள்ளத்தினையுடைய அவளொடும் மீண்டு சென்று, அவன் சுற்றத்தோர்க்கும் தொடர்பு உறு கிளைகட்கும் - அவனுடைய சுற்றத்தார்க்கும் தொடர்பு கொண்ட கிளைஞர்க்கும், பற்றிய கிளைஞரில் பசிப்பிணி அறுத்து-அன்பாற் பிணித்த நினது சுற்றத்தாரைப் போலக் கருதிப் பசியாகிய நோயைக் கெடுத்து, பல் ஆண்டு புரந்த இல்லோர் செம்மல் - பல யாண்டு கள் காத்த வறியோர் தலைவனே;

      
படிறு - பொய், வறியான் - பொருளிலான் எனக் கொண்டு பொருள் பெறுகைக்காகப் பொய்க்கரி கூறினான் என்றலும் அமை யும். கண்டு தெளிந்த கூறலே உண்மைக்கரியாகலான், அறியாக் கரி பொய்க்கரியாயிற்று. நல்லோர்க்குத் தீங்கு செய்யாமையான், 'நன்னெடும் பூதம்' எனப்பட்டது. தவமறைந் தொழுகுவோர் முதலியோரைப் பூதம் புடைத்துண்ணுதலை, 1"தவமறைந் தொழு கும்.........கைப்படுவோர்" என வருதலானறிக. உயிர் - உடல் ; ஆகுபெயர். இல்லோர் செம்மல் - இல்லறத்தோர் தலைவன் என லுமாம். நரகன் - நரகமடைதற்குரியான் ; பாவி.

      
கோவலன் வணங்க வணங்கியோனைக் கருணைமறவ, செல்லாச் செல்வ, இல்லோர் செம்மல் என நாவலந்தணன் புகழ்ந்தனன் என்க.

1 சிலப். 5 : 128-32.