|
95
100
105
|
கோவலன் கூறுமோர்
குறுமகன் தன்னால்
காவல் வேந்தன் கடிநகர் தன்னில்
நாறைங் கூந்தல் நடுங்குதுய ரெய்தக்
கூறைகோட் பட்டுக் கோட்டுமா ஊரவும்
அணித்தகு புரிகுழ லாயிழை தன்னொடும்
பிணிப்பறுத் தோர்தம் பெற்றி யெய்தவும்
மாமலர் வாளி வறுநிலத் தெறிந்து
காமக் கடவுள் கையற் றேங்க
அணிதிகழ் போதி யறவோன் றன்முன்
மணிமே கலையை மாதவி யளிப்பவும்
நனவு போல நள்ளிருள் யாமத்துக்
கனவு கண்டேன் கடிதீங் குறுமென |
|
கோவலன்
கூறும் - கோவலன் கூறுவான் : ஓர் குறு மகன் தன்னால் - ஒரு கீழோனால், காவல் வேந்தன்
கடிநகர் தன்னில் - புரத்தலில் வல்ல பாண்டிய மன்னனுடைய காவலையுடைய இம் மதுரை நகரத்தின்கண்,
நாறு ஐங் கூந்தல் நடுங்கு துயர் எய்த - மணநாறும் ஐந்து பகுதியாக முடிக்கப்படும் கூந்தலை
யுடைய இவள் கண்டார் நடுங்கத்தக்க துன்பத்தினை அடைய, கூறை கோள்பட்டுக் கோட்டு மா
ஊரவும் - உடுத்த ஆடை பிறராற் கொள்ளப்பட்டு யான் பன்றிமீது ஏறிச் செலுத்தவும், அணித்தகு
புரிகுழல் ஆயிழை தன்னொடும் - அழகு தக்க கடை குழன்ற கூந்தலினையும் ஆராய்ந்த இழையினையும்
உடைய இவளோடு, பிணிப்பு அறுத்தோர்தம் பெற்றி எய்தவும் - பற்றினை யறுத்த சான்றோர்
பெறும் பேற்றினை யான் பெறவும், மா மலர் வாளி வறுநிலத்து எறிந்து - மலர் அம்புகளை
வெறுநிலத்தில் வீசி, காமக் கடவுள் கையற்று ஏங்க - மன்மதன் செயலற்று ஏக்கங் கொள்ளும்
வண்ணம், அணிதிகழ் போதி அறவோன் தன்முன் - அழகு விளங்கும் போதிக்கண் அறவோனாகிய
புத்தனிடத்து, மணிமேகலையை மாதவி அளிப்பவும் - மணிமேகலையை மாதவி கொடுக்கவும், நனவு
போல நள் இருள் யாமத்து - நனவினிற் போலச் செறிந்த இருளினையுடைய கடை யாமத்தின்கண்,
கனவு கண்டேன் - கனாக் கண்டேன், கடிது ஈங்கு உறும் என - ஆக லான் பொல்லாங்கு ஒன்று
இப்பொழுதே வந்து சேரும் என்று சொல்ல ;
குறுமை - கீழ்மை யென்னும்பொருட்டு. காவல்
வேந்தன் என வும் கடிநகர் எனவும் கூறியது துயரெய்தலாகாவிடத்திலே துய ரெய்த என்னும் பொருள்
தோன்ற. கோட்டு மா - எருமைக்கடாவு மாம். பிணிப்பறுத்தோர் பெற்றியாவது துறக்கமடைதல்.
நனவு - விழிப்பு. நளியென்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது. கடிது உறும் - கடையாமத்துக்
கனவாதலின் கடிதில் உறும் என்னலுமாம். கடி தீங்கு எனப் பிரித்து மிக்க தீங்கு, அச்சத்தையுடைய
தீங்கு எனவுமாம்.
பன்றியையும் எருமைக்கடாவையும் ஊர்தல் காணின்
தீங்குண் டாம் என்பதும் கடையாமத்திற் காணின் விரைவில் உறும் என்பதும்,
1"களிறுமேல்
கொள்ளவும் கனவி னரியன காணா"
2"சொல்லத்
தகுமுகட் டொட்டகம் வெட்டுந் துணைமருப்பார் இல்லத் தெருமை கழுதைக ளென்றிவை யேறிநின்றே
மெல்லத் தரையி லிழிவதன் முன்னம் விழித்திடுமேல் கொல்லத் தலைவரு மாற்றருஞ் சீற்றத்துக்
கூற்றுவனே"
3"படைத்தமுற்
சாமமோ ராண்டிற் பலிக்கும் பகரிரண்டே கிடைத்தபிற் சாம மிகுதிங்க ளெட்டிற் கிடைக்கு
மென்றும் இடைப்பட்ட சாமமோர் மூன்றினிற் றிங்களொர் மூன்றென்பவால் கடைப்பட்ட சாமமு
நாள்பத்து ளேபலங் கைபெறுமே"
என்பவற்றான் அறியப்படும். |
1.
புறம். 40. 2.
கனா நூல். 15. 3. கனா நூல். 3.
|
|