5. அடைக்கலக் காதை

115 அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய

புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்குப்
பான்மடை கொடுத்துப் பண்பிற் பெயர்வோள்
ஆயர் முதுமகள் மாதரி என்போள்
காவுந்தி யையையைக் கண்டடி தொழலும்


115
உரை
119

      அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய - அறத்தை விரும்பிய உள்ளத்தினையுடைய முனிவர்கள் நிறைந்த, புறஞ் சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்கு - எயிற்புறத்து மூதூர்க் கண் எழுந்தருளிய பூப்போலும் கண்களையுடைய இயக்கிக்கு, பால்மடை கொடுத்துப் பண்பிற் பெயர்வோள் - முறையானே பாற்சோறு படைத்து மீள்வோளாகிய, ஆயர் முதுமகள் மாதரி என்போள் - இடையர் குடிப் பிறந்த முதியோள் மாதரி எனப்படுபவள், கவுந்தியையையைக் கண்டு அடி தொழலும் - கவுந்தியடிகளைக் கண்டு அவருடைய அடிகளை வணங்குதலும்;

      அறவோர் பல்கிய மூதூர்க்கண் இயக்கி என்க. இயக்கி - ஒரு பெண் தெய்வம்; பாண்டி நாட்டில் இசக்கியென வழங்கும் ; ஆரியாங்கனை யெனவும் கூறுவர்; ஆரியாங்கனை - கணவனிருக்கும் பொழுதே துறவு பூண்ட தவப்பெண். பண்பிற் பால் மடை கொடுத்து என மாறுக. இனி, புறஞ்சிறை மூதூர்க்கண் காவுந்தியையை எனவும் இயைப்பர்.