|
120
|
ஆகாத் தோம்பி ஆப்பயன்
அளிக்கும்
கோவலர் வாழ்க்கையோர் கொடும்பா டில்லை
தீதிலள் முதுமகள் செவ்வியள் அளியள்
மாதரி தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு
ஏதம் இன்றென எண்ணின ளாகி |
|
ஆ
காத்து ஓம்பி ஆப் பயன் அளிக்கும் - பசுக்களைப் பிணி முதலியவற்றினின்றும் காப்பாற்றிப்
புல் நீர் முதலிய அளித்துப் பேணி அப் பசுவின் பயனை யாவர்க்கும் கொடுக்கின்ற, கோவலர்
வாழ்க்கை ஓர் கொடும்பாடு இல்லை - இடையர்களுடைய வாழ்க்கையில் ஒரு சிறிதும் தீமை
இல்லை, தீது இலள் - ஆகலின் குற்றமில்லாதவள், முதுமகள் செவ்வியள் அளியள் - மேலும்
இவள் முதியோளும் உட்கோட்டமில்லாதவளும் தண்ணளியுடையாளுமாவள், மாதரி தன்னுடன் மடந்தையை
இருத்துதற்கு ஏதம் இன்று என எண்ணினள் ஆகி - ஆகலான் இம் மாதரி யிடத்துக் கண்ணகியை
வைப்பதனால் குற்றம் ஒன்றும் இன்றாம் எனக் கருதியவளாய் ;
பிணி
முதலிய உண்டாயவழி அவற்றை நீக்குதலைக் காத்து எனவும், புல் அருத்தல் முதலியவற்றை ஓம்பி
எனவும் கூறினார். ஆப் பயன் - பால் முதலியன. அளியள் - அளிக்கத்தக்காள் எனலும் பொருந்தும்
கொடும்பாடு - கொடுமை. |
|