5. அடைக்கலக் காதை

125





130
மாதரி கேளிம் மடந்தைதன் கணவன்

தாதையைக் கேட்கில் தன்குல வாணர்
அரும்பொருள் பெறுநரின் விருந்தெதிர் கொண்டு
கருந்தடங் கண்ணியொடு கடிமனைப் படுத்துவர்
உடைப்பெருஞ் செல்வர் மனைப்புகு மளவும்
இடைக்குல மடந்தைக் கடைக்கலந் தந்தேன்


125
உரை
130

      மாதரி கேள் - மாதரியே கேட்பாயாக, இம்மடந்தை தன் கணவன் தாதையைக் கேட்கின் தன் குலவாணர் - இப் பெண்ணின் கணவனுடைய தந்தையின் பெயரைக் கேட்பாராயின் அவன் குலத்துப் பிறந்த இந் நகரத்து வாழ்வோர், அரும் பொருள் பெறுநரின் விருந்து எதிர் கொண்டு - பெறுதற்கரிய செல்வத்தினைப் பெற்றார் போன்று தமது விருந்தினராக எதிர் கொண்டு அழைத்து, கருந்தடங் கண்ணியொடு கடிமனைப் படுத்துவர் - இக் கரிய பெரிய கண்களையுடையாளொடு தமது காவலையுடைய இல்லத்தின்கண் வைத்துக் கொள்வர், உடைப் பெருஞ் செல்வ மனைப்புகும் அளவும் - அங்ஙனம் அப் பெருஞ் செல்வ முடையார் இல்லத்தின்கண் புகும் வரையும், இடைக்குல மடந்தைக்கு அடைக்கலம் தந்தேன் - இடையர்குலப் பெண்ணாகிய நினக்கு இவளை அடைக்கலமாகக் கொடுத்தேன் ;

      தாதையை - தந்தையின் பெயரை ; என்றது மாசாத்துவான் மகன் இவன் என்பதனைக் கேட்கின் என்றவாறு. உடைப்பெருஞ் செல்வர் - பெருஞ் செல்வமுடையார்; உடைய பெரிய செல்வர் எனலுமாம். 1 "உடைப் பெருஞ் செல்வரும்" என்றார் பிறரும். இடைக்குல மடந்தை - முன்னிலையிற் படர்க்கை வந்த வழுவமைதி.

1 நாலடி. 368.