5. அடைக்கலக் காதை





135
மங்கல மடந்தையை நன்னீ ராட்டிச்
செங்கயல் நெடுங்கண் அஞ்சனந் தீட்டித்
தேமென் கூந்தற் சின்மலர் பெய்து
தூமடி உடீஇத் தொல்லோர் சிறப்பின்
ஆயமும் காவலும் ஆயிழை தனக்குத்

தாயும் நீயே யாகித் தாங்கிங்கு


131
உரை
136

      மங்கல மடைந்தையை நல் நீர் ஆட்டி - அழகிய இக் கண்ணகியைத் தூய நீராற் குளிப்பாட்டி, செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் தீட்டி - சிவந்த கயல் போலும் நெடிய கண்களில் மை எழுதி, தே மென் கூந்தல் சில் மலர் பெய்து - தேன் பொருந்திய மெல்லிய கூந்தற்கண் சிலவாகிய மலர்களைச் சூடி, தூ மடி உடீஇ - தூய புடைவையை உடுத்து, தொல்லோர் சிறப்பின் ஆயமும் காவலும் ஆயிழை தனக்குத் தாயும் நீயே ஆகித் தாங்கு - ஆராய்ந்த கலன் அணிந்த இவளுக்கு முன்னோர் கூறிய சிறப்பினை யுடைய தோழிமாரும் காவற் பெண்டும் நற்றாயும் நீயேயாகிக் காப்பாற்றுவாயாக ;

      மங்கல நன்னீர் என இயைப்பினு மமையும். தொல்லோர் சிறப்பின் ஆயம் - பழையோராகச் சிறப்பித்துக் கூறப்பட்ட ஆயம் எனலுமாம். காவல் - செவிலித் தாயர்.

      மடந்தையை ஆட்டித் தீட்டிப் பெய்து உடீஇத் தாங்கு என்க.