5. அடைக்கலக் காதை


140





145

கடுங்கதிர் வெம்மையிற் காதலன் றனக்கு
நடுங்குதுய ரெய்தி நாப்புலர வாடித்

தன்துயர் காணாத் தகைசால் பூங்கொடி
இன்துணை மகளிர்க் கின்றி யமையாக்
கற்புக் கடம்பூண்ட இத்தெய்வ மல்லது
பொற்புடைத் தெய்வம் யாங்கண் டிலமால்
வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது

நீணில வேந்தர் கொற்றம் சிதையாது
பத்தினிப் பெண்டிர் இருந்தநா டென்னும்
அத்தகு நல்லுரை அறியா யோநீ


139
உரை
148

      கடுங் கதிர் வெம்மையின் காதலன் தனக்கு - ஞாயிற்றின் கொடிய வெம்மையினால் துன்பமுற்ற தன் கணவன் பொருட்டு, நடுங்கு துயர் எய்தி நாப் புலர வாடி - கண்டார் நடுங்கத்தக்க துயரத்தை அடைந்து நாவும் புலர வாட்டமுற்று, தன் துயர் காணாத் தகை சால் பூங்கொடி - தனது வழி நடைத் துன்பத்தினைச் சிறிதும் உணராத தகுதி மிக்க பூங்கொடிபோல் வாளாகிய, இன் துணை மகளிர்க்கு இன்றியமையா - தம் கணவர்க்கு இனிய துணையாகப் பொருந்திய பெண்களுக்கு இன்றியமையாத, கற்புக் கடம் பூண்ட இத் தெய்வம் அல்லது - கற்பாகிய கடனை மேற்கொண்ட இத் தெய்வமே யல்லாது, பொற்பு உடைத் தெய்வம் யாம் கண்டிலமால் - வேறு பொலிவினையுடைய தெய்வம் ஒன்றினை யாம் காணேம், வானம் பொய்யாது வளம் பிழைப்பு அறியாது - பருவ மழை பெய்தலினும் தவறாது நில வளமும் பிழையாது, நீள் நில வேந்தர் கொற்றம் சிதை யாது - பெரிய நிலப் பரப்பினை ஆளும் மன்னரது வெற்றியும் அழிவுறாது, பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு - கற்புடை மகளிர் வாழும் நாட்டின்கண், என்னும் அத் தகு நல் உரை அறியாயோ நீ - என்று பெரியோர் கூறும் அத் தகுதி வாய்ந்த நல்ல மொழியை நீ உணராயோ ;

      வெம்மையினால் துன்புற்ற என ஒரு சொல் வருவிக்க. காதலன் துயர்கண்டு தன் துயர் காணாளாயினாள், கற்புக் கடம் பூண்டோளாகலான் ; என்னை ? 1 "ஓங்கல் வெற்ப, ஒருநாள் விழும முறினும் வழிநாள், வாழ்குவ ளல்ல ளென்றோழி" எனவும் கூறுவராகலான். பூங்கொடியாகிய தெய்வம் கற்புக் கடம் பூண்ட தெய்வம் என்க. கற்புக் கடம் பூண்ட பூங்கொடியாகிய தெய்வம் எனினும் அமையும். இருந்த நாட்டின்கண் பொய்யாது அறியாது சிதையாது என்க. இனி, நாடு பொய்யாது, அறியாது, சிதையாது என முடித்தலுமாம்.

1 அகம், 18.