5. அடைக்கலக் காதை






160
திருவில் இட்டுத் திகழ்தரு மேனியன்
தாரன் மாலையன் தமனியப் பூணினன்
பாரோர் காணாப் பலர்தொழு படிமையன்
கருவிரற் குரங்கின் கையொரு பாகத்துப்

பெருவிறல் வானவன் வந்துநின் றோனைச்


156
உரை
160

      திருவில் இட்டுத் திகழ்தரு மேனியன் - வான வில்லைப் போன்று ஒளிவிட்டு விளங்குகின்ற மேனியை யுடையனாய், தாரன் - பூமாலையை உடையனாய், மாலையன் - மணி மாலையை உடையனாய், தமனியப் பூணினன் பொன்னாற் செய்த அணி கலங்களை அணிந்தவனாய், பாரோர் காணாப் பலர் தொழு படிமையன் - இவ் வுலக மக்கள் காணவொண்ணாத தேவர் பலரும் வணங்கும் தெய்வ வடிவத்தினை யுடையவனாகிய, கருவிரல் குரங்கின் கை ஒரு பாகத்து - ஒரு பாகத்துக் கை கரியவிரலையுடைய குரங்கின் கையாகவுடைய, பெருவிறல் வானவன் வந்து நின்றோனை - பெரிய வெற்றியினை யுடைய தேவனொருவன் ஆங்கண் வந்து நின்றவனை ;

      திருவில் - வானவில். வானவில் இன்ன காலத்து இவ்வாறு தோன்றும் என்பது அறியப்படாதவாறு போலத் தேவனுடைய வரவும் அறியப்படாமையான் "திருவி லிட்டுத் திகழ்தரு மேனியன்" என்றார் எனலுமாம் ; என்னை? 1 "வானிடு வில்லின் வரவறியா வாய்மையான்" என்றார் பிறருமாகலான். காணா - முன் கண்டறியாத என்றலுமாம்.

      2 "தாரன் மாலையன் தமனியப் பூணினன், பாரோர் காணாப் பலர்தொழு படிமையன்" என்றார் மணிமேகலையினும். தாரன் மாலையன் என்பதனைத் தாரமாலையன் எனப் பாடமோதி, மந்தார மாலையையுடையவன் எனினும் பொருந்தும், படிமை - தெய்வ வடிவு. விறல் - வெற்றி ; ஆவது தேவனாயது. நின்றோன் - வினைப்பெயர்.

1 நாலடி. கடவுள் வாழ்த்து. 2 மணி. 3 ; 36-7.
.