|
165
170
175
180
185
190
|
எட்டி சாயலன் இருந்தோன்
றனது
பட்டினி நோன்பிகள் பலர்புகு மனையிலோர்
மாதவ முதல்வனை மனைப்பெருங் கிழத்தி
ஏதம் நீங்க எதிர்கொள் அமயத்து
ஊர்ச்சிறு குரங்கொன் றொதுங்கிஉள் புக்குப்
பாற்படு மாதவன் பாதம் பொருந்தி
உண்டொழி மிச்சிலும் உகுத்த நீரும்
தண்டா வேட்கையில் தான்சிறி தருந்தி
எதிர்முகம் நோக்கிய இன்பச் செவ்வியை
அதிராக் கொள்கை அறிவனும் நயந்துநின்
மக்களின் ஓம்பு மனைக்கிழத் தீயென
மிக்கோன் கூறிய மெய்ம்மொழி ஓம்பிக்
காதற் குரங்கு கடைநா ளெய்தவும்
தானஞ் செய்வுழி அதற்கொரு கூறு
தீதறு கென்றே செய்தன ளாதலின்
மத்திம நன்னாட்டு வாரணந் தன்னுள்
உத்தர கௌத்தற் கொருமக னாகி
உருவினும் திருவினும் உணர்வினுந் தோன்றிப்
பெருவிறல் தானம் பலவுஞ் செய்தாங்கு
எண்ணால் ஆண்டின் இறந்தபிற் பாடு
விண்ணோர் வடிவம் பெற்றன னாதலின்
பெற்ற செல்வப் பெரும்பய னெல்லாம்
தற்காத் தளித்தோள் தானச் சிறப்பெனப்
பண்டைப் பிறப்பிற் குரங்கின் சிறுகை
கொண்டொரு பாகத்துக் கொள்கையிற் புணர்ந்த
சாயலன் மனைவி தானந் தன்னால்
ஆயினன் இவ்வடிவு அறிமி னோவெனச்
சாவகர்க் கெல்லாம் சாற்றினன் காட்டத்
தேவ குமரன் தோன்றினன் என்றலும் |
|
எட்டி
சாயலன் இருந்தோன் தனது -எட்டிப்பட்டத்தினையுடைய இல்லறத்திருந்தோனாகிய சாயலன் என்ற
பெயரை யுடையானது, பட்டினி நோன்பிகள் பலர் புகும் மனையில் - பட்டினி விட்டுண்ணும் விரதிகள்
பலரும் வந்து சேர்கின்ற இல்லத்தின்கண், ஓர் மா தவ முதல்வனை - பெரிய தவத்தான் மேம்பட்ட
ஒருவனை, மனைப் பெருங் கிழத்தி - இல்லறத்திற்குத் துணையாகிய அச் சாயலனுடைய மனைவி,
ஏதம் நீங்க எதிர் கொள் அமயத்து - தம் தீவினை ஒழிய எதிர்கொண்டு அழைத்த சமயத்து.
ஊர்ச் சிறு குரங்கு ஒன்று ஒதுங்கி உள்புக்கு
- அவ்வூர்க் கணுள்ள சிறியதோர் குரங்கு அச்சத்தான் ஒதுங்கி அம் மனையினுள்ளே நுழைந்து,
பாற்படு மாதவன் பாதம் பொருந்தி - அருளறத்தின் பாற் பட்ட அம் மாதவனுடைய திருவடிகளை
வணங்கி, உண்டு ஒழி மிச்சிலும் உகுத்த நீரும் - அவன் உண்டு ஒழித்த சோற்றினையும் ஊற்றிய
நீரையும், தண்டா வேட்கையின் தான் சிறிது அருந்தி - நீங்காத விருப்பினால் சிறிதளவு
உண்டு பசி ஒழிந்து. எதிர் முகம் நோக்கிய இன்பச் செவ்வியை - இன்பத்தோடு எதிராக
இருந்து தன் முகத்தை நோக்கிய தன்மையை, அதிராக் கொள்கை அறிவனும் நயந்து - நடுக்கமில்லாக்
கோட் பாட்டினையுடைய மாதவனும் விரும்பி, நின் மக்களின் ஓம்பு மனைக்கிழத்தீ என -
இல்லறத்திற்கு உரியவளே இக் குரங்கினை நின் மக்களை ஓம்புதல் போலக் காப்பாயாக என்றுரைக்க,
மிக்கோன் கூறிய மெய்ம்மொழி ஓம்பி - அம்
மேலோன் கூறிய உண்மை மொழியினைக் காத்து, காதற் குரங்கு கடை நாள் எய்தவும் - அன்பு
நிறைந்த அக் குரங்கு இறந்த பின்னரும், தானம் செய்வுழி - தானம் செய்யும்போது, அதற்கு
ஒரு கூறு தீது அறுகென்றே செய்தனள் ஆதலின் - அக் குரங்கிற்கு ஒரு பகுதித் தானத்தை அதன்
தீய பிறவி ஒழிகவென்று கருதிச் செய்து வந்தாள் ஆகலான், மத்திம நல் நாட்டு வாரணம்
தன்னுள் - நல்ல மத்திமதேசத்துள்ள வாரணவாசி என்னும் நகரத்து, உத்தர கௌத்தற்கு ஒரு
மகன் ஆகி - உத்தர கௌத்தன் என்னும் ஒருவனுக்கு ஒப்பற்ற புதல்வனாய், உருவினும் திருவினும்
உணர்வினும் தோன்றி - அழகினானும் செல்வத்தானும் அறிவானும் மேம்பட்டு விளங்கி, பெருவிறல்
தானம் பலவும் செய்து- பெரிய வென்றியோடு தானங்கள் பலவற்றையும் செய்து, ஆங்கு எண்ணால்
ஆண்டின் இறந்த பிற்பாடு - அப் பிறவியிலே முப்பத்திரண்டாவது ஆண்டில் இறந்த பின்னர்,
விண்ணோர் வடிவம் பெற்றனன் - தேவர் வடிவத்தினை அடைந்தனன்,
ஆதலின் - ஆகையால், பெற்ற செல்வப் பெரும்பயன்
எல்லாம் - அங்ஙனமாய செல்வத்தினைப் பெற்ற பெரிய பயன் யாவும், தற்காத்து அளித்தோள்
தானச் சிறப்பு என - தன்னைக் காத்து அளிசெய்தவள் செய்த தானத்தின் மிகுதியான் ஆம்
என்று உட்கொண்டு, பண்டைப் பிறப்பிற் குரங்கின் சிறுகை கொண்டு ஒரு பாகத்து - முன்னைப்
பிறவியில் பொருந்திய கருங் குரங்கின் கை வடிவான சிறிய கையை ஒரு பாகத்தே கொண்டு,
கொள்கையிற் புணர்ந்த சாயலன் மனைவி தானந் தன்னால் ஆயினன் இவ் வடிவு - தானம் செய்யும்
கோட்பாட்டிலே கூடிய சாயலனுடைய மனைவி முன்னாளிற் செய்த தானத்தின் பயனால் இவ் வடிவத்தைப்
பெற்றேன், அறிமினோ என - நீவிர் இதனை அறியுங்கள் என்று, சாவகர்க்கு எல்லாம் சாற்றினன்
காட்ட - உலக நோன்பிகள் யாவர்க்கும் காட்டி அறிவுறுத்த, தேவ குமரன் தோன்றினன் எனலும்
- இத் தெய்வ குமாரன் இங்ஙனம் தோன்றினான் என்று கூறவும் ;
எட்டி - வணிகர்க்கு அரசரளிக்கும் சிறப்புப்பெயர்.
இருந் தோன் என்றது இக் கூறிய இடத்திருந்தோன் எனலுமாம். இருந்தோன் தனது மனை பலர்
புகு மனை என்க. பாற்படு மாதவன் என்பதற்குத் தன்பாற்பட்ட தவத்தையுடையான். எனலும் பொருந்தும்.
மிச்சில் - எச்சில், எச்சில் உணவு. தண்டா வேட்கை-பசி என்ப. முகம் நோக்கிய செவ்வி,
மெய்ம்மொழியை ஓம்புதலாவது அவர் மொழிந்ததற்குப் புறம்பாக நடவாது அதற்கு அடங்கி அக்
குரங்கினைப் போற்றலாம். இனி, மெய்ம்மொழி ஓம்பி என்பதற்கு மெய்ம்மொழியின் படியே
அக் குரங்கினைக் காத்து என்றலும் பொருந்தும். 'மக்களின் ஓம்பு' என்றதனால் தானம்
செய்வுழி அதற்குரிய ஒரு பகுதியைச் செய்தனள் என்க. தீது - தீவினையுமாம். கடைநாள் -
இறப்பு. உத்தரன் கவிப்பன் எனப் பாடமோதிக் கவிப்பன் என்னும் வணிகனுக்கு உத்தரன்
என்னும் பெயரோடு ஒரு மகனாகி எனவும், கவிப்பன் - பசு மறையத் தேடின பொருளுடையவன் எனவும்
உரைப்பாருமுளர். மக்களிடத்து அழகும் அறிவும் ஆக்கமும் மூன்றும் ஒருங்கே தோன்றுதல் அரிதாகலான்,
"உருவினும் திருவினும் உணர்வினும் தோன்றி" என்றார். தானம் பல செய்தற்குப் பலருடைய
உள்ளம் ஒருப்படாவாகலான் அங்ஙனமின்றி ஒருப்பட்டுச் செய்யும் தானத்தினைப் "பெருவிறற்
றானம்" என்றார். உடையான் தொழில் உடைமை மேல் ஏற்றப்பட்டது. பிற்பாடு - பின்னர்.
1 "பெண்ணணி கோலம் பெயர்ந்த பிற்பாடு"
என்றார் முன்னும். தானச் சிறப்பு - தானத்தாற் பெற்ற சிறப்பு என்றலும் அமையும். |
1
சிலப். 13 ; 1.
|
|