|
210
215 |
மிளையுங் கிடங்கும்
வளைவிற் பொறியும்
கருவிர லூகமும் கல்லுமிழ் கவணும்
பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும்
காய்பொன் உலையும் கல்லிடு கூடையும்
தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை அடுப்பும்
கவையும் கழுவும் புதையும் புழையும்
ஐயவித் துலாமும் கைபெயர் ஊசியும்
சென்றெறி சிரலும் பன்றியும் பணையும்
எழுவுஞ் சீப்பும் முழுவிறற் கணையமும்
கோலும் குந்தமும் வேலும் பிறவும் |
|
மிளையும்
- காவற்காடும், கிடங்கும் - அகழியும், வளைவிற் பொறியும் - வளைந்து தானே எய்யும்
இயந்திர வில்லும், கருவிரல் ஊகமும் - கரியவிரலினையுடைய கருங்குரங்கு போன்ற பொறியும்,
கல் உமிழ் கவணும் - கல்லினை வீசுகின்ற கவணும், பரிவு உறு வெந்நெயும் - சேர்ந்தாரைத்
துன்புறுத்துகின்ற வெம்மை மிக்க நெய்யும், பாகு அடு குழிசியும் - செம்பினை உருக்குகின்ற
குழிசிகளும், காய்பொன் உலையும் - இரும்பு காய்ந்து உருகற்கு வைத்த உலைகளும், கல் இடு
கூடையும் - கல் நிறைய இடப் பெற்ற கூடைகளும், தூண்டிலும் - தூண்டில் வடிவாகப் பண்ணிய கருவிகளும்,
தொடக்கும் - கழுத்திற் பூட்டி முறுக்கும் சங்கிலியும், ஆண்தலை அடுப்பும் - ஆண்டலைப்
புள் வடிவாகச் செய்த அடுப்புகளும், கவையும் - அகழியினின்று ஏறின் தள்ளுகின்ற இருப்புக்
கப்புகளும், கழுவும் - கழுக் கோலும், புதையும் - அம்புக் கட்டுகளும், புழையும் - ஏவறைகளும்,
ஐயவித் துலாமும் - தன்னை நெருங்கினார் தலையை நெருக்கித் திருகும் மரங்களும், கை பெயர்
ஊசியும் - மதிலின் தலையைப் பற்றுவார் கையை நடுங்கச்செய்யும் ஊசிப் பொறிகளும், சென்று
எறி சிரலும் - பகைவர்மேற் சென்று தாக்கும் சிச்சிலிப் பொறியும், பன்றியும் - மதிற்கண்
ஏறினாரைக் கோட்டாற் கிழிக்கும் பன்றிப் பொறியும், பணையும் - மூங்கில் வடிவாகப்
பண்ணி அடித்தற்கு வைத்த பொறிகளும், எழுவும் சீப்பும் - கதவிற்கு வலியாக உள்வாயிற்படியிலே
நிலத்திலே வீழ விடுமரங்களும், முழு விறற் கணையமும் - மிக்க வலிபொருந்திய கணைய மரங்களும்,
கோலும் -எறிகோலும், குந்தமும் - சிறுசவளமும், வேலும் - ஈட்டி முதலியனவும், ஞாயிலும்
- குருவித் தலைகளும், பிறவும் - மதிற்குரிய ஏனைய பொறி முதலியனவும், சிறந்து - மிகுந்து
;
வெந்நெய்
- கொதிக்க வைத்த நெய், பாகு அடு குழிசி - சாணகங் கரைத்துக் காய்கிற மிடா எனவும்
செம்புருக்கு எனவும் கூறுப. வெந்நெய் முதலிய மூன்றும் மதிலைப் பற்றுவார்மீது இறைத்தற்
கமைந்தன. கல்லிடு கூடை என்பதற்கு இடங்கணிப் பொறிக்குக் கல்லிட்டு வைக்கும் கூடை எனவும்,
தொடக்கு எனபதற்குக் கயிற்றுத் தொடக்கு எனவும். ஆண்டலை அடுப்பு என்பதற்கு ஆண்தலைப்
புள் வடிவாகச் செய்யப்பட்ட பொறி நிரைகள் எனவும் கூறுவர். ஐயவித்துலாம் தலையை நெருக்கித்
திருகும் என்பதனை, 1 "விற்பொறிகள்
.........மரநிலையே" என்னும் சிந்தாமணிச் செய்யுளின் நச்சினார்க்கினியர் உரையானுணர்க.
இனி, இதற்கு, கதவிற்குக் காவலாகப் புறவாயிலே கற்கவி தொடங்கித் தூக்கப்படும் மரம்
எனவும், பற்றாக்கை தூக்கிப் போகட்ட விட்டமெனவும், சாணம்புக் கூடு எனவும், சிற்றம்புகள்
வைத்து எய்யும் இயந்திரம் எனவும் பொருள் கூறுப. கை பெயர் ஊசி - கையைக் கெடுக்கும் ஊசி; கையை அப்புறப்படுத்தும் ஊசி; நிரைக்கழு எனலும் பொருந்தும். கதவு திறக்குங்காலத்து
மேலே எழுப்புகையால் எழுவுஞ் சீப்பும் என்றார். கணையம் - சீப்பு அகப்படக் குறுக்கே போடப்படும்
மரமுமாம். ஞாயில் - ஏப் புழைக்கு நடுவாய் எய்து மறையும் சூட்டு என்பர் நச்சினார்க்கினியர்.
(சீவக, 105. செய்யுள் உரை நோக்குக). பிற என்றது களிற்றுப்பொறி, புலிப்பொறி முதலியனவாம். |
1
சீவக. 102.
|
|