|
50
|
ஒய்யெனத் தெழித்தாங்
குயர்பிறப் பாளனைக்
கையகத் தொழித்ததன் கையகம் புக்குப்
பொய்பொரு முடங்குகை வெண்கோட் டடங்கி
மையிருங் குன்றின் விஞ்சையன் ஏய்ப்பப்
பிடர்த்தலை இருந்து பெருஞ்சினம் பிறழாக்
கடக்களி றடக்கிய கருணை மறவ |
|
ஒய்
எனத் தெழித்து ஆங்கு உயர்பிறப்பாளனை - அப்பொழுது விரைவில் உரப்பி அம் மறையோனை,
கை அகத்து ஒழித்து - யானையின் கையினின்றும் விடுவித்து, கை அகம் புக் குப் பொய் பொரு
முடங்கு கை வெண்கோட்டு அடங்கி - தான் அவ் வியானையின் புரை பொருந்திய கையினிடத்துப்
புகுந்து போர் செய்யும் வளைதலையுடைய வெள்ளிய கோட்டின்கண் அடங்கி, மை இருங் குன்றின்
விஞ்சையன் ஏய்ப்பப் பிடர்த்தலை இருந்து - கரிய பெரிய குன்றின்கண் இருந்த வித்தியாதரனைப்
போல அதன் பிடரினிடத்திருந்து, பெருஞ்சினம் பிறழாக் கடக்களிறு அடக்கிய கருணை மறவ
- மிக்க சினம் நீங்காத களிற்றின் மதத்தினை யடக்கிய அருள்வீரனே ;
ஒய் - யானையைப் பாகர் வையும் ஆரிய மொழியுமாம்.
பொய்க் கையகம் எனவும் பொருவெண்கோடு எனவும் இயைக்க. இனி, பொய்பொரு முடங்குகை என்பதற்குப்
புரை பொருந்திய வளைந்த கை என்பதும் பொருந்தும். பிறழ்தல் - நீங்குதல் ; 1"மொய்கொளப்
பிறழ்ந்து முத்தார் மருப்பிடைக் குளித்து" என்றார் பிறரும். கடக் களிறு அடக்கிய -
மதத்தையுடைய யானையை அடக்கிய எனலுமாம். மறையோற் கெய்தும் துயரினைப் பொறாமையானும்,
தன்னுயிர்க் கஞ்சாது பாய்ந்து அடக்குதலானும் கருணை மறவன் என்றான். |
1
சீவக. 983.
|
|