6. கொலைக்களக் காதை



.

60


கல்லதர் அத்தம் கடக்க யாவதும
வல்லுந கொல்லோ மடந்தைமெல் லடியென
வெம்முனை யருஞ்சுரம் போந்ததற் கிரங்கி

எம்முது குரவர் என்னுற் றனர்கொல
மாயங் கொல்லோ வல்வினை கொல்லோ
யானுளங் கலங்கி யாவதும் அறியேன


57
உரை
62

         கல்லதர் அத்தம் கடக்க யாவதும் வல்லுந கொல்லோ மடந்தை மெல்லடி என - மடந்தையின் மெல்லிய அடிகள் பருக்கைக் கற்கள் நிறைந்த நெறியாகிய அருவழியைக் கடப்பதற்குச் சிறிதாவது வன்மையையுடையனவோ என்று நினைந்து, வெம்முனை அருஞ்சுரம் போந்ததற்கு இரங்கி - வெம்மையையுடைய மறவர் ஆறலைக்கும் முனைகளையுடைய அரிய சுரத்து நெறியிற் போந்தமைக்கு இரக்கங்கொண்டு, எம் முது குரவர் என் உற்றனர் கொல் - எம்முடைய இரு முதுகுரவரும் எந் நிலையை அடைந்தனரோ, மாயங் கொல்லோ - யான் இங்ஙன முற்றது கனவோ, வல்வினை கொல்லோ - நனவாயின் முன்செய்த தீவினையின் பயனோ, யான் உளம் கலங்கி யாவதும் அறியேன் - இப்பொழுது என்னுள்ளங் கலக்கமுறலான் யான் இவற்றினொன்றினையும் உணர்கின்றிலேன் ;

      முனை - மறவர் இருப்புக்கள் ; குறும்புகள். யாவதும் வல்லுநகொல்லோ என்றது வல்லா என்றவாறு. என்னுற்றனர் கொல் - என்ன துன்பமுற்றாரோ ; இறந்தனரோ. மாயம் - கனவு. யாவதும் - யாதும் ; சிறிதும்.