|
.
75
80
|
அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னைநும்
பெருமக டன்னொடும் பெரும்பெயர்த் தலைத்தாள்
மன்பெருஞ் சிறப்பின் மாநிதிக் கிழவன்
முந்தை நில்லா முனிவிகந் தனனா
அற்புளஞ் சிறந்தாங் கருண்மொழி யளைஇ
எற்பா ராட்ட யானகத் தொளித்த
நோயும் துன்பமும் நொடிவது போலுமென்
வாயல் முறுவற்கவர் உள்ளகம் வருந்தப்
போற்றா வொழுக்கம் புரிந்தீர் யாவதும்
மாற்றா உள்ள வாழ்க்கையே னாதலின்
ஏற்றெழுந் தனன்யான் என்றவள் கூறக்
|
|
அறவோர்க்கு அளித்தலும் - சாவகர்க்குக் கொடுத்தலும், அந்தணர் ஓம்பலும் -
பார்ப்பனரைப் பேணுதலும், துறவோர்க்கு எதிர்தலும் - துறவிகளை எதிர்க்கொள்ளுதலும்,
தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர்கோடலும் இழந்த என்னை - மேலையோர் உயர்த்துக்
கூறும் சிறப்பினையுடைய விருந்தினரை எதிர்கொள்ளுதலுமாய இவற்றை இழந்த என்னை, நும் பெருமகள்
தன்னொடும் - நுமது தாயோடும், பெரும் பெயர்த் தலைத்தாள் மன்பெருஞ் சிறப்பின் மாநிதிக்
கிழவன் - பெரிய புகழினையும் தலையாய முயற்சியினையும் மன்னரது பெருமை மிக்க சிறப்பினையும்
உடைய மாசாத்துவான் கண்டு, முந்தை நில்லா முனிவு இகந்தனன் ஆ - நீர் என் முன்பு நில்லாமையாற்
றோன்றும் வெறுப்பினை நீங்கினேனாக, அற்பு உளம் சிறந்து அருள்மொழி அளைஇ என் பாராட்ட
- அதனை உணர்ந்த அவர்கள் உள்ளத்து மிக்குத் தோன்றும் அன்போடு அருள் நிறைந்த மொழிகளைக்
கலந்து என்னைப் பாராட்ட, யான் அகத்து ஒளித்த நோயும் துன்பமும் நொடிவது போலும் -
நான் என்னுள்ளத்து மறைத்த மனக்கவலையையும் மெய்வருத்தத்தினையும் கூறுவது போன்ற, என்
வாய் அல் முறுவற்கு அவர் உள்ளகம் வருந்த - எனது உண்மையல்லாப் புன்சிரிப்பிற்கு அவர்கள்
உள்ளம் வருந்தும் வண்ணம், போற்றா ஒழுக்கம் புரிந்தீர் - நீர் பெரியோர் வெறுக்கும்
தீய வொழுக்கத்தினை விரும்பினீர் ஆகவும், யாவதும் மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின்
- உம்முடைய சொல்லைச் சிறிதும் மாற்ற நினையாத உள்ளத்து வாழ்க்கையை உடையேனாகலான்,
ஏற்று எழுந்தனன் யான் என்று அவள் கூற - நான் நீர் கூறியதனை உடன்பட்டு எழுந்தேன் என்று
கண்ணகி கூற ; தாள் - முயற்சி. மன்பெரும் சிறப்பு - அரசனாற் பெறும் பெரிய சிறப்பு.
இகத்தல் - நீங்குதல். நீர் நில்லா முனிவு என ஒரு சொல் வருவிக்க. நொடிதல் - சொல்லுதல்.
வாய் - உண்மை. |
|