6. கொலைக்களக் காதை


85





90

குடிமுதற் சுற்றமும் குற்றிளை யோரும்
அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி
நாணமும் மடனும் நல்லோ ரேத்தும்
பேணிய கற்பும் பெருந்துணை யாக
என்னொடு போந்தீங் கென்றுயர் களைந்த
பொன்னே கொடியே புனைபூங் கோதாய்

நாணின் பாவாய் நீணில விளக்கே
கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி
சீறடிச் சிலம்பி னொன்றுகொண் டியான்போய்
மாறி வருவன் மயங்கா தொழிகெனக்


84
உரை
93

       குடிமுதற் சுற்றமும் - குடிக்கண் முதற் சுற்றமாய் தாய் தந்தை முதலியோரையும், குற்றிளையோரும் - குற்றேவல் புரியும் மகளிரையும், அடியோர் பாங்கும் - அடியார் பகுதியையும், ஆயமும் நீங்கி - சேவிக்கும் தோழிமாரையும் விட்டு விலகி, நாணமும் மடனும் நல்லோர் ஏத்தும் பேணிய கற்பும் பெருந்துணையாக - நாணினையும் மடனையும் நல்லோர்களது போற்றுதலையும் விரும்பிய கற்பினையும் பெருமை மிக்க துணையாகக் கொண்டு, என்னொடு போந்து ஈங்கு என் துயர் களைந்த - இவ்விடத்து என்னோடு வந்து என் துன்பத்தினைக் கெடுத்த, பொன்னே கொடியே புனை பூங் கோதாய் - பொன்னையொப்பாய் கொடிபோல்வாய் அழகிய மலர்மாலையை அனையாய், நாணின் பாவாய் நீள் நில விளக்கே-நாணினையுடைய பாவையை நிகர்ப்பாய் பெரிய இவ்வுலகிற்கு விளக்கமாக அமைந்தாய், கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி - கற்புக்குக் கொழுந்து போல்வாய் அழகின் செல்வியே, சீறடிச் சிலம்பின் ஒன்று கொண்டு யான் போய் மாறி வருவன் மயங்காது ஒழிகென - நின் சிறிய அடிக்கு அணியாகிய சிலம்புகளுள் ஒன்றனை யான் கொண்டு சென்று விற்று வருவேன் ; வருந்துணையும் நீ மயங்கா திருப்பாயாகவென்று சொல்லி :

அடியோர் பகுதியராவார் - செவிலித்தாய் முதலிய ஐவர் : ஆவார், ஆட்டுவாள், ஊட்டுவாள், ஓலுறுத்துவாள், நொடி பயிற்றுவாள், கைத்தாய் எனப்படுவார். இனி இதற்குச் சேவிக்கும் பெயர் எனவும் கூறுப.

மடன் - கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை. பேணிய கற்பு என்றது கற்புத்தான் இவளை விரும்பி வந்தடைந்தது என்ற படி. நீணில விளக்கு என்பதனை உவமை யாக்கி நிலத்தின் விளக்காகிய ஞாயிற்றினையும் திங்களினையும் விளக்கத்தால் ஒப்பாய் எனலும் அமையும். யான் போய் மாறி வருவன் என்றது மேல் நிகழும் நிகழ்ச்சியைக் குறிப்பிற் புலப்படுத்தும் மொழியாகவுளது