|
95 |
கருங்கயல் நெடுங்கட் காதலி தன்னை
ஒருங்குடன் தழீஇ உழையோ ரில்லா
ஒருதனி கண்டுதன் உள்ளகம் வெதும்பி
வருபனி கரந்த கண்ண னாகிப்
பல்லான் கோவல ரில்லம் நீங்கி
வல்லா நடையின் மறுகிற் செல்வோன்
|
|
கருங்கயல்
நெடுங்கண் காதலி தன்னை - கரிய கயல் போலும் நெடிய கண்களையுடைய தன் காதலியை, ஒருங்குடன்
தழீஇ - மெய்ம்முழுதும் தழுவி, உழையோர் இல்லாத ஒரு தனி கண்டு தன் உள்ளகம் வெதும்பி
- அவளருகிலிருக்கும் தோழி முதலியோர் ஒருவரும் இல்லாத அவளது தனிமையை நோக்கித் தன்
உள்ளம் கொதித்தலான், வரு பனி கரந்த கண்ணன் ஆகி - நிறைந்த நீரை மறைத்த கண்களையுடையனாய்,
பல் ஆன் கோவலர் இல்லம் நீங்கி - பல பசுக்களையும் எருமைகளையும் உடைய இடையர் வீட்டினை
விட்டு நீங்கி, வல்லா நடையின் மறுகிற் செல்வோன் - தளர்வுற்ற நடையோடு அவ் வீதியிற்
செல்கின்றவன்;
உழையோரில்லா ஒரு தனி கண்டு என்றது முன்னர் இவள்
ஆயத்தார் பலரோடு கூடியிருக்கும் நிலைமையை நோக்கிக் கூறியதாகக் கொள்க. இனி, ஈண்டு
ஆய்ச்சியரெல்லாம் குரவையாடப் போயினமையான் ஆண்டு ஒருவரு மில்லாமை நோக்கிக் கூறியதாக்
கலுமமையும். கண்ணீரைக் கரந்தான், காதலி அது காணின் வருந்துமென்று கொண்டு. வல்லா
நடை - மாட்டாத நடை. |
|