6. கொலைக்களக் காதை





120

மத்தக மணியொடு வயிரங் கட்டிய
பத்திக் கேவணப் பசும்பொற் குடைச்சூற்
சித்திரச் சிலம்பின் செய்வினை யெல்லாம்

பொய்த்தொழிற் கொல்லன் புரிந்துடன் நோக்கிக்


117
உரை
120

     மத்தக மணியொடு வயிரம் கட்டிய பத்திக்கேவணம் - தலையாய மாணிக்கத்தோடு வயிரமும் அழுத்திய பத்தி பட்ட கோவணத்தையுடைய, பசும்பொன் குடைச் சூல் சித்திரச் சிலம்பின் செய்வினை எல்லாம் - பசிய பொன்னாற் செய்த புடை பட்டு உட்கருவையுடைய சித்திரத் தொழிலமைந்த சிலம்பினது தொழில் நுணுக்கமெல்லாம், பொய்த்தொழிற் கொல்லன் புரிந்துடன் நோக்கி-பொய் கூறும் தொழிலினையுடைய பொற் கொல்லன் விலையை நோக்காது கோவலன்மீது குற்றங் கூறுதற்குத் தான் கவர்ந்த சிலம்போடு ஒக்கும் படியை நோக்கி ;

பத்தி - வரிசை. கேவணம் - கல்லழுத்துங் குழி. குடைச்சூல் - புடைபடுதலுமாம்; குடச்சூல் எனப் பாடங் கொள்ளலுமாம்; 1 "குடச்சூல், அஞ்சிலம் பொடுக்கி" என்பது காண்க. குற்றமிலான் மேற் குற்றங் கூறுதற்கு இடுவந்தி கூறுதல் என்ப.

1 அகம், 198.