6. கொலைக்களக் காதை






125

கோப்பெருந் தேவிக் கல்லதை இச்சிலம்பு
யாப்புற வில்லை யெனமுன் போந்து
விறல்மிகு வேந்தற்கு விளம்பியான் வரவென்
சிறுகுடி லங்கண் இருமின் நீரெனக்

கோவலன் சென்றக் குறுமக னிருக்கையோர்
தேவ கோட்டச் சிறையகம் புக்கபின்


121
உரை
126

     கோப்பெருந்தேவிக்கு அல்லதை - அரசனுடைய மாதேவிக்கு அல்லாது, இச் சிலம்பு யாப்புறவு இல்லை என முன் போந்து - இச் சிலம்பு பிறர்க்குப் பொருந்துமாறு இல்லை என்று கூறி முன்னின்றும் போய், விறல் மிகு வேந்தற்கு விளம்பி யான் வர - வெற்றி மிக்க அரசனுக்கு யான் இதனை அறிவித்து வருந்துணையும், என் சிறு குடில் அங்கண் இருமின் நீர் என - எனது சிறிய குடிலாகிய அவ்விடத்தே நீர் இருப்பீராக என்று சொல்ல, கோவலன் சென்று அக் குறுமகன் இருக்கை யோர் தேவ கோட்டச் சிறையகம் புக்கபின் - கோவலனும் போய் அக் கீழோனுடைய இருக்கைக்கு அயலதாகியதோர் தேவகோட்டத்தின் மதிலுக்குள் புகுந்த பின்;

     அரச பத்தினியைத் தேவியென்றல் மரபு ; பெருந்தேவி - பட்டத்து மனைவி. அல்லதை - ஐ இடைச்சொல். சிறுகுடிலங்கண் - சிறு குடிலுக்கு அருகான அவ்விடம் எனலுமாம். குறுமகன் - கீழோன். சிறை - மதில்.