6. கொலைக்களக் காதை





130

கரந்தியான் கொண்ட காலணி ஈங்குப்
பரந்து வெளிப்படா முன்னம் மன்னற்குப்
புலம்பெயர் புதுவனிற் போக்குவன் யானெனக்

கலங்கா வுள்ளம் கரந்தனன் செல்வோன்


127
உரை
130

       கரந்து யான் கொண்ட கால் அணி - யான் வஞ்சித்துக் கொண்ட சிலம்பு, ஈங்குப் பரந்து வெளிப்படா முன்னம் மன்னற்கு - என்னிடத்ததே யென்று யாவரும் அறிய அரசனுக்கு வெளிப்படுதற்கு முன்னரே, புலம்பெயர் புதுவனிற் போக்குவன் யான் என - வேறு நாட்டினின்றும் போந்த இப் புதியோனால் என் கள்ளத்தினை யான் மறைப்பேனென்று, கலங்கா உள்ளம் கரந்தனன் செல்வோன் - துணிந்த உள்ளத் தினைக் கரந்து செல்கின்றவன் ;

       புதுவனிற் போக்குதல் - அவன் வாயிலாகத் தன் வஞ்சத்தை மறைத்தல். போக்குதல் - மறைத்தல்.