|
135
140
|
கூடன் மகளிர் ஆடல் தோற்றமும்
பாடற் பகுதியும் பண்ணின் பயங்களும்
காவல னுள்ளம் கவர்ந்தன என்றுதன்
ஊட லுள்ளம் உள்கரந் தொளித்துத்
தலைநோய் வருத்தந் தன்மே லிட்டுக்
குலமுதல் தேவி கூடா தேக
மந்திரச் சுற்றம் நீங்கி மன்னவன்
சிந்தரி நெடுங்கட் சிலதியர் தம்மொடு
கோப்பெருந் தேவி கோயில் நோக்கிக்
காப்புடை வாயிற் கடைகாண் அகவையின்
விழ்ந்தனன் கிடந்து தாழ்ந்துபல ஏத்திக்
|
|
கூடல் மகளிர் ஆடல் தோற்றமும் - கூடலிடத்து நாடக மகளிருடைய ஆடலிற் றோன்றும் தோற்றமும்,
பாடற் பகுதியும் - அவ்வாடலுக் கேற்ற பாடலின் வேறுபாடும், பண்ணின் பயங்களும் - யாழிசையின்
பயன்களும், காவலன் உள்ளம் கவர்ந்தன என்று - அரசனுடைய நெஞ்சினை ஈர்த்தனவென்று கருதி,
தன் ஊடல் உள்ளம் உள் கரந்து ஒளித்து - தனது ஊடு தலையுடைய உள்ளத்தை உள்ளே மறைத்து
ஒடுக்கி, தலைநோய் வருத்தம் தன்மேல் இட்டு - தலைநோயாகிய வருத்தத்தைத் தன் மேல்
ஏறட்டுக் கொண்டு, குலமுதல் தேவி கூடாது ஏக - உயர் குடிப் பிறப்பினையுடைய பெருந்தேவி
தன்னொடு மேவாதே தனது கோயிற்கண் அந்தப்புரம் சென்றுவிடலான், மந்திரச் சுற்றம் நீங்கி
மன்னவன் - அரசன் காம மிக்கவனாய் அமைச்சர் திரளினை விட்டு நீங்கி, சிந்து அரி
நெடுங்கண் சிலதியர் தம்மொடு - அரி சிதறிய நெடிய கண்களையுடைய பணிப்பெண்டிருடனே, கோப்பெருந்தேவி
கோயில் நோக்கி - கோப்பெருந்தேவியினுடைய கோயிலை நோக்கிச் செல்வோனை, காப்பு
உடை வாயிற் கடைகாண் அகவையின் - காவலையுடைய வாயிற் கடையிடத்துக் காணுமுன்பே, வீழ்ந்தனன்
கிடந்து தாழ்ந்து பல ஏத்தி - வணங்கிக் கீழே விழுந்து கிடந்து பலவாக ஏத்தி ;
ஆடற்றோற்றம் என்பதற்கு இரட்டுற மொழிதலால் ஆடலிடத்துத்
தோன்றும் முகத் தோற்றமும் ஆடல் வேறுபாடும் என்றுரைத்தலுமாம். தலைநோய் வருத்தம் -
வருத்தத்தைச் செய்யும் தலைநோய் எனலுமாம். நோக்கிச் செல்வோனை என ஒரு சொல் வருவித்
துரைக்க. கடைகாண் அகவை என்பதற்கு, நோக்கிச் சென்று கடையைக் காணுமுன் எனக் கூறிக்
கடைகாணுதலை அரசன் தொழிலாக்கினுமமையும். செல்வோன் வீழ்ந்து கிடந்து தாழ்ந்து ஏத்தி
என்க. |
|