|
145
|
கன்னக மின்றியும் கவைக்கோ லின்றியும்
துன்னிய மந்திரத் துணையெனக் கொண்டு
வாயி லாளரை மயக்குதுயி லுறுத்துக்
கோயிற் சிலம்பு கொண்ட கள்வன்
கல்லென் பேரூர்க் காவலர்க் கரந்தென்
சில்லைச் சிறுகுடி லகத்திருந் தோனென
|
|
கன்னகம்
இன்றியும் கவைக்கோல் இன்றியும் - கன்னக்கோலும் கொடிற்றுக் கோலும் இன்றாகவும்,
துன்னிய மந்திரம் துணையெனக் கொண்டு - தன் உள்ளத்துப் பொருந்திய மந்திரத்தினையே
களவிற்குத் துணையாகக் கொண்டு, வாயிலாளரை மயக்கு துயில் உறுத்து - வாயில் காப்போரை
மயக்கத் தினை உண்டுபண்ணும் உறக்கத்தின்கண் பொருந்துவித்து, கோயிற் சிலம்பு கொண்ட
கள்வன் - கோயிற்கண் இருந்த சிலம்பினைக் கவர்ந்துகொண்ட கள்வன், கல்லென் பேரூர்க்
காவலர்க் கரந்து - ஒலியினையுடைய பெரிய ஊர்க்குக் காவலரானோர் கண்களை மறைத்து, என்
சில்லைச் சிறுகுடில் அகத்து இருந்தோன் என - என்னுடைய இழிந்த சிறிய குடிலின்கண் வந்திருக்கின்றான்
என்று கூற ;
கன்னகம் - அகழுங்
கருவி. கவைக்கோல் - இட்டிகை முதலியவற்றைப் பறிக்குங் கருவி. மந்திரம் - துயிலுறுக்கும்
மந்திரம். முன்னாள் கோயிற் சிலம்பு தன்னிடத்தில்லையென்று சாதித்தானாகலின், ஈண்டுக்
'கோயிற் சிலம்பு கொண்ட கள்வன்' என்றான். சில்லை - இழிவு. |
|