6. கொலைக்களக் காதை




150



வினைவிளை கால மாதலின் யாவதும்
சினையலர் வேம்பன் தேரா னாகி

ஊர்காப் பாளரைக் கூவி ஈங்கென்
தாழ்பூங் கோதை தன்காற் சிலம்பு
கன்றிய கள்வன் கைய தாகில்
கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கெனக்


148
உரை
153

           வினை விளை காலம் ஆதலின் - வினை தோன்றிப் பயனைத் தரும் காலம் எய்திற்றாகலான், யாவதும் சினை அலர் வேம்பன் தேரான் ஆகி - கொம்புகளையுடைய வேம்பின் மலர் மாலையைச் சூடிய பாண்டியன் சிறிதும் ஆராய்தலிலனாய், ஊர் காப்பாளரைக் கூவி - ஊர் காவலரை அழைத்து, ஈங்கு என் தாழ் பூங்கோதை தன் காற் சிலம்பு - எனது தாழ்ந்த பூங்கோதையை யுடையாளது காலின்கண் அணியும் சிலம்பு, கன்றிய கள்வன் கையது ஆகின் - அடிப்பட்ட அக் கள்வனுடைய கையகத்ததாயின், கொன்று அச் சிலம்பு கொணர்க ஈங்கு என - அக் கள்வனைக் கொன்று அச் சிலம்பினை இங்குக் கொண்டு வருகவென்று சொல்ல ;

         அலர் வேம்பன் - வேம்பலரோன் ; அலர் ஆகுபெயரான் மாலையை யுணர்த்திற்று. தாழ்தல் - நீடல். கன்றிய கள்வன் - களவில் தழும்பினவன். தேர்ந்து முறைசெய்தற் குரிய காவலன் தேராது இங்ஙனம் கூறியது வினையின் பயனென்பார் 'வினை விளை காலமாதலின்' என்றார். முறை செய்யும் அரசன் ஆராயவேண்டிய நெறியொன்றையும் கைக்கொண்டில னென்பார் 'யாவதும் தேரானாகி' என்றார். எனினும் என் கோதையின் காற்சிலம்பு கள்வன் கையதாகின் கொன்று கொணர்கவென்றமையான் அம் மன்னனிடத்துக் கொடுங்கோன்மை யின்மை உணரப்படும். கொல்லல் - வருத்துதலுமாம். தன் தேவியின் ஊடல் தீர்க்கும் மருந்தாய் அஃது உதவு மென்னுங் கருத்தால் கொணர்க ஈங்கு என்றானென்க. அவனைக் கொல்ல அசி சிலம்போடு ஈங்குக் கொணர்கவெனக் கருதியவன், வினை விளை காலமாதலின் கொன்று அச் சிலம்பு கொணர்க வென்றான் என்பர் அடியார்க்கு நல்லார்.