|
155
|
காவலன் ஏவக் கருந்தொழிற் கொல்லனும்
ஏவ லுள்ளத் தெண்ணியது முடித்தெனத்
தீவினை முதிர்வலைச் சென்றுபட் டிருந்த
கோவலன் றன்னைக் குறுகின னாகி
|
|
காவலன்
ஏவக் கருந்தொழிற் கொல்லனும்-அங்ஙனம் அரசன் ஊர் காப்பாளரைத் தன்னோடு ஏவுதலானே
கொலைத் தொழிலையுடைய கொல்லனும், ஏவல் உள்ளத்து எண்ணியது முடித்து என - ஏவப்பட்ட
உள்ளத்தோடே யான் கருதியதனை முடித்தேன் என்று கருதி, தீவினை முதிர்வலைச் சென்றுபட்டு
இருந்த - தீயவினையாகிய சூழ்ந்த வலைக்கண்ணே சென்று அகப் பட்டிருந்த, கோவலன் தன்னைக்
குறுகினன் ஆகி - கோவலனை அணுகியவனாய் ;
கருந்தொழில் - கொலைத்தொழில். ஏவல் உள்ளம் - ஏவிய உள்ளம்; துரந்த உள்ளம். முடித்து
- முடித்தேன் ; விரைவு பற்றி எதிர் காலம் இறந்த காலமாகக் கூறப்பட்டது. இனி முடிந்தது
எனற் பாலது முடித்து என விகாரமாயிற்று எனவுங் கூறுப. முதிர்தல் - சூழ்தல். தீ வினை முதிர்வலை
என்பதனை முதிர் தீவினை வலை என மாற்றி, முற்றிய தீவினையாகிய வலை எனலுமமையும். குறுகுதல்
- அணுகுதல். |
|