6. கொலைக்களக் காதை




160

வலம்படு தானை மன்னவன் ஏவச்
சிலம்பு காணிய வந்தோர் இவரெனச்

செய்வினைச் சிலம்பின் செய்தி யெல்லாம்
பொய்வினைக் கொல்லன் புரிந்துடன் காட்ட


158
உரை
161

          வலம் படு தானை மன்னவன் ஏவ - வென்றி காணும் சேனையினையுடைய அரசன் ஏவுதலானே, சிலம்பு காணிய வந்தோர் இவர் என - இவர்கள் சிலம்பினைக் காண்பதற்கு வந்தனர் ; அதனைக் காட்டுமின் எனச் சொல்லி, செய்வினைச் சிலம்பின் செய்தி எல்லாம் பொய்வினைக் கொல்லன் புரிந்து உடன் காட்ட - பொய்த்தொழில் சார்ந்த பொற்கொல்லன் அவரை வேறாக அழைத்துத் தொழிலமைந்த சிலம்பின் அருமையெல்லாம் விரும்பிச் சொல்லிக் கோயிற் சிலம்புடன் இஃது ஒக்குந் தன்மையையும் உடன் காட்ட ;

       காணிய, செய்யியவென்னும் வினையெச்சம், காட்டுமின், சொல்லெச்சம். செய்தி - தொழில் நுட்பம்; அருமை. உடன் காட்ட - கோயிற்சிலம்புடன் ஒக்குந் தன்மையைக் காட்ட ; என்பதனால் அவர்களை வேறாக அழைத்துச் சென்று கூறினமை பெறப்படும்.