6. கொலைக்களக் காதை




மந்திரம் தெய்வம் மருந்தே நிமித்தம்
தந்திரம் இடனே காலம் கருவியென்று
எட்டுட னன்றே இழுக்குடை மரபிற்
கட்டுண் மாக்கள் துணையெனத் திரிவது


166
உரை
169

          மந்திரம் தெய்வம் மருந்தே நிமித்தம் - மந்திரமும் தெய்வமும் மருந்தும் நிமித்தமும், தந்திரம் இடனே காலம் கருவி என்று எட்டுடன் அன்றே - தந்திரமும் இடனும் காலமும் கருவியும் எனப்படுகின்ற எட்டனையுமன்றோ, இழுக்கு உடை மரபிற் கட்டுண் மாக்கள் துணை எனத் திரிவது - குற்றம் பொருந்திய முறைமையினையுடைய களவு கண்டு உண்ணும் வாழ்க்கையினையுடைய கள்வர் துணையாகக் கொண்டு திரிவது ;

         மருந்தே இடனே இவற்று ஏகாரம் எண் ; 1 "எண்ணே காரம் இடையிட்டுக் கொளினும், எண்ணுக் குறித்தியலு மென்மனார் புலவர்" என்பவாகலான் ஏனையவற்றெண்ணேகாரம் தொக்கன. இழுக்குடை மரபிற் கட்டுண்மாக்கள் எட்டுடனன்றே துணையெனத் திரிவது என மாறுக. உடன் : முற்றும்மைப் பொருட்டு.

1 தொல். சொல். 288.