6. கொலைக்களக் காதை



205





210

நிலனகழ் உளியன் நீலத் தானையன

கலன்நசை வேட்கையிற் கடும்புலி போன்று
மாரி நடுநாள் வல்லிருள் மயக்கத்து
ஊர்மடி கங்குல் ஒருவன் தோன்றக்
கைவாள் உருவஎன் கைவாள் வாங்க
எவ்வாய் மருங்கினும் யானவற் கண்டிலேன

அரிதிவர் செய்தி அலைக்கும் வேந்தனும்
உரியதொன் றுரைமின் உறுபடை யீரெனக்


204
உரை
211

          நிலன் அகழ் உளியன் நீலத் தானையன் - முன்னர் நிலத்தினை அகழும் உளியை யுடையனாய் நீல நிறம் பொருந்திய கச்சினையுடையவனாய், கலன் நசை வேட்கையிற் கடும்புலி போன்று - கலன்களை மிக விரும்பிய விருப்பத்தானே பசியால் தான் உண்டற்கு விலங்கினைத் தேடி யலையும் புலியைப் போன்று, மாரி நடுநாள் வல் இருள் மயக்கத்து ஊர் மடிகங்குல் ஒருவன் தோன்ற - மழைக்காலத்து இடையாமமாகிய மிக்க இருள் கலந்த ஊராரெல்லாம் உறங்கிய இராக் காலத்தே ஒரு கள்வன் வந்து தோன்ற, கை வாள் உருவ என் கை வாள் வாங்க - யான் என் கைவாளினை உறையி னின்றும் உருவினேனாக அவன் எனது அக் கைவாளினைப் பற்ற, எவ் வாய் மருங்கினும் யான் அவற் கண்டிலேன் - அதன் பின்னர் அவனை யான் எவ்விடத்தும் காணகில்லேன், அரிது இவர் செய்தி - ஆகலான் இவருடைய செய்கை யாவராலும் அறிதற்கரிது, அலைக்கும் வேந்தனும் - இவனை நாம் கொல்லாது விடின் நம்மை அரசன் வருத்துவான், உரியது ஒன்று உரைமின் உறு படையீர் என - ஆகலான் மிக்க படைக்கலத்தினை உடையீர் இனிச் செய்தற்குரியது ஒன்றனை ஆராய்ந்து கூறுமின் என்று சொல்ல ;

         1 "நிறங்கவர்பு புனைந்த நீலக் கச்சினர், மென்னூ லேணிப் பன்மாண் சுற்றினர், நிலனக ழுளியர் கலனசைஇக் கொட்குங், கண்மா றாடவ ரொடுக்க மொற்றி" என்றார் பிறரும். கோவலனையும் கள்வனாகக் கொண்டு 'இவர் செய்கை ' என்றான்.

          உளியன் தானையன் புலிபோன்று ஒருவன் தோன்ற என்க.

1 மதுரைக், 639-42.