|
215
|
கல்லாக் களிமக னொருவன் கையில்
வெள்வாள் எறிந்தனன் விலங்கூ டறுத்தது
புண்ணுமிழ் குருதி பொழிந்துடன் பரப்ப
மண்ணக மடந்தை வான்றுயர் கூரக்
காவலன் செங்கோல் வளைஇய விழ்ந்தனன்
கோவலன் பண்டை ஊழ்வினை யுருத்தென்.
|
|
கல்லாக் களிமகன் ஒருவன் கையில் வெள்வாள் எறிந்தனன் - கல்வியின்மையாற் கொலையஞ்சானாய
களிமகன் ஒருவன் தன் கையிலுள்ள வெள்ளிய வாளாலே வெட்டினான், விலங்கு ஊடு அறுத்தது -
அவ் வெட்டானது குறுக்காகத் துணித்தது, புண் உமிழ் குருதி பொழிந்து உடன் பரப்ப - துணிபட்ட
புண்ணின் வழியே கொப்புளிக்கின்ற உதிரம் குதித்து எங்கும் பரக்க, மண்ணக மடந்தை வான்
துயர் கூர - நில மடந்தை மிக்க துயரத்தினை அடைய, காவலன் செங்கோல் வளைஇய - அக்
காவலனுடைய செங்கோல் வளையும் வண்ணம், வீழ்ந்தனன் கோவலன் பண்டை ஊழ்வினை உருத்தென்
- முன்னைத் தீவினை முதிர்தலான் கோவலன் வெட்டுண்டு வீழ்ந்தனன் என்க.
வெள்வாள் - பகைவரோடு
பொருது குருதி படியாத வாள். மண்ணக மடந்தை துயர் கூர்ந்தது இவன் வெட்டுண்டமைக்கும் அதனாற்
கண்ணகி துயருறுதற்கு மென்க. முன்னரும், 1"மண்ணக
மடந்தையை மயக்கொழிப் பனள்போல்" என்றார். இனி, மண்ணக மடந்தை - மதுரை யெனக்
கொண்டு மேல் தனக்கு ஆவதுணர்ந்து துயர் கூர என்றுரைத்தலுமாம்.
இது நிலைமண்டில வாசிரியப்பா. |
1 சிலப்,
16 : 40.
|
|