6. கொலைக்களக் காதை




              நேரிசை வெண்பா

நண்ணும் இருவிளையும் நண்ணுமின்கள் நல்லறமே
கண்ணகி தன்கோள்வன் காரணத்தான்--மண்ணில்
வளையாத செங்கோல் வளைந்ததே பண்டை
விளைவாகி வந்த வினை.


1
உரை
4

       "நண்ணு மிருவினையு ..... வந்த வினை." பண்டை விளைவாகி வந்த வினை - பாண்டியன் முன் செய்த தீங்கினை பயனாகி வந்த தீவினையால், மண்ணில் வளையாத செங்கோல் - இவ் வுலகத்து வளை யாத அவனுடைய செங்கோல், கண்ணகி தன் கேள்வன் காரணத் தான் வளைந்தது - கண்ணகியின் கணவனாய கோவலன் முன்னிலை யாக வளைவுற்றது, நண்ணும் இருவினையும் - ஆகலான், நீவிர் செய்த இரு வினைப் பயனும் நும்மை வந்து பொருந்தும் என்பதனை அறிந்து, நண்ணுமின்கள் நல்லறமே - உலகத்தீர் நல்வினையைச் செய்யுங்கள்.

      பாண்டியன் கோல் வளைதற்கு பழவினை காரணமும், கோவலன் வாயிலு மென்றார்.

       கொலைக்களக் காதை முற்றிற்று.