6. கொலைக்களக் காதை



20

சாவக நோன்பிக ளடிக ளாதலின்
நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள்

நெடியா தளிமின் நீரெனக் கூற



18
உரை
21

         சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின் - அடிகள் சாவக நோன்புடையராகலான், நாத்தூண் நங்கையொடு நாள் வழிப்படூஉம் அடிசில் ஆக்குதற்கு - நாத்தூணாகிய ஐயையொடு பகற்பொழுதே உண்ணும் உணவினைச் சமைப்பதற்கு, அமைந்த நற்கலங்கள் நெடியாது அளிமின் நீர் எனக் கூற - பொருந்திய நல்ல கலங்களை நீட்டியாது நீவிர் அளிமின் என்று சொல்ல ;

      சாவகநோன்பி - துறவாது விரதங்காப்போர். அடிகள் என்றது ஈண்டுக் கோவலனை. நாத்தூண் - கணவனுடன் பிறந்தாள். நாத்தூணாகிய நங்கை. இனி, நாத்தூணும் நங்கையும் எனலுமாம் ; ஈண்டு நாத்தூண் - ஐயை ; நங்கை - கண்ணகி, நாள்வழிப்படூஉ மடிசில் - காலத்திலே ஆக்கும் அடிசில் எனலுமமையும். நற்கலம் - புதுக்கலம். அமைந்த நற்கலம் என்றது தாங்கள் ஆளும் கலமன்றி மேன்மக்களாளும் கலத்தினை. நெடித்தல் - நீட்டித்தல்

       இடைக்குலமடந்தை ஆய்ச்சியர் தம்மொடு மனைப்படுத்துக் கூடி நீராட்டித் தொழுது (என்று) அளிமின் எனக் கூற என்க.