6. கொலைக்களக் காதை


45





50

அரசர் பின்னோர்க் கருமறை மருங்கின்
உரிய வெல்லாம் ஒருமுறை கழித்தாங்கு
ஆயர் பாடியின் அசோதைபெற் றெடுத்த
பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ
நல்லமு துண்ணும் நம்பி யீங்குப்
பல்வளைத் தோளியும் பண்டுநங் குலத்துத்

தொழுனை யாற்றினுள் தூமணி வண்ணனை
விழுமந் தீர்த்த விளக்குக் கொல்லென
ஐயையுந் தவ்வையும் விம்மித மெய்திக்
கண்கொளா நமக்கிவர் காட்சி யீங்கென


44
உரை
53

         அரசர் பின்னோர்க்கு அருமறை மருங்கின் உரியவெல் லாம் ஒருமுறை கழித்து - அரிய மறையினிடத்து அரசர் பின்னோராய வணிகர்க்கு உரியனவாகக் கூறிய பலியிடல் முதலிய வற்றை ஒரு முறையாற் கழித்து, ஆங்கு ஆயர் பாடியின் அசோதை பெற்று எடுத்த பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ நல் அமுது உண்ணும் நம்பி ஈங்கு - இம் மதுரைக்கண் ஆயர் பாடியில் நல்ல அமுதினை யுண்ணும் நம்பியாகிய கோவலன் அம் மதுரைக்கண் ஆயர்பாடியில் அசோதை என் பாள் பெற்றெடுத்த அந்த நல்லமுதமுண்ணும் புதிய காயாம் பூப்போலும் நிறத்தினையுடைய கண்ணனோதான், பல்வளைத் தோளியும் - இவன் துயர் தீர்த்த இப் பலவாகிய வளையலை அணிந்த தோளினையுடையாளும், பண்டு நம் குலத்துத் தொழுனை யாற்றினுள் தூமணிவண்ணனை விழுமம் தீர்த்த விளக்குக்கொல் என - முன்னர் நம் குலத்துத் தோன்றிய தூய நீலமணி போலும் நிறமுடைய மாயோனைக் காளிந்தி யாற்றின்கண் துயர் தீர்த்த நப்பின்னை என்னும் விளக்கோதான் என்று, ஐயையும் தவ்வையும் விம்மிதம் எய்தி - ஐயையும் அவள் தாய் மாதரி யும் வியப் புற்று, கண் கொளா நமக்கு இவர் காட்சி ஈங்கு என - இவருடைய அழகு நம் கண்களின் அடங்காவென்று புகழ்ந்து கூற ;

       அரசர் பின்னோர் - வணிகர், தன்னூரிற் செய்வனவெல்லாம் செய்யப் பெறாமையான் ஒருமுறை கழித்து என்றார்.

      ஈங்கு நல்லமுதுண்ணும் நம்பி ஆங்கு அசோதை பெற்றெடுத்த மலர் வண்ணன் கொல்லோ என மாறுக. நங்குலத்துத் தூமணி வண்ணன் என்க.