|
5
10 |
கயலெழுதிய
இமயநெற்றியின்
அயலெழுதிய புலியும்வில்லும்
நாவலந்தண் பொழின்மன்னர்,
ஏவல் கேட்பப் பாரர சாண்ட
மாலை வெண்குடைப் பாண்டியன் கோயிலில்
காலை முரசங் கனைகுர லியம்புமாகலின்
நெய்ம்முறை நமக்கின் றாமென்று
ஐயைதன் மகளைக் கூஉய்க்
கடைகயிறு மத்துங்கொண்டு
இடைமுதுமகள் வந்துதோன்றுமன் ; |
|
கயல் எழுதிய இமய நெற்றியின் -
இமயத்துச்சியில் தான் எழுதிய கயல் மீனிற்கு, அயல் எழுதிய புலியும் வில்லும் - பக்கத்தே
எழுதிய புலியினையும் வில்லினையுமுடைய சோழனும் சேரனும், நாவலந் தண் பொழில் மன்னர்
- நாவலந்தீவிலுள்ள ஏனைய அரசர்களும், ஏவல் கேட்பப் பார் அரசு ஆண்ட - தன் ஏவல் கேட்டு
ஒழுக நிலவுலக முழுதையும் அரசாண்ட, மாலை வெண்குடைப் பாண்டியன் கோயிலின் - முத்த மாலை
பொருந்திய வெண்கொற்றக் குடையினையுடைய பாண்டியனது கோயிற்கண்ணே, காலை முரசம் கனை
குரல் இயம்பும் - பள்ளி யெழுச்சி முரசு மிக்க குரலோடு முழங்கும், ஆகலின் நெய்ம் முறை
நமக்கு இன்று ஆம் என்று - ஆதலான் நமக்கு இன்று கோயிற்கு நெய்யளக்கும் முறையாம் என
எண்ணி, ஐயை தன் மகளைக் கூய்க் கடைகயிறும் மத்தும் கொண்டு இடைமுதுமகள் வந்து தோன்றுமன்
- இடைக்குலத்து முதியளாகிய மாதரி ஐயையாகிய தன் மகளை அழைத்துக் கடைகயிற்றினையும்
மத்தினையும் எடுத்துக்கொண்டு தயிர்த் தாழியிடத்து வந்து தோன்றினாள் ;
கயல் முதலியன இலச்சினை. இமயநெற்றியின்
எழுதிய கயல் அயல் எழுதிய புலியும் வில்லுமெனக் கூட்டுக. கயலை வணங்குதற்கு அதன் அயலில்
புலியும் வில்லும் எழுதப்பட்டனவன்றி ஒப்பாக எழுதப்பட்டில வென்க. என்னை? இவ் வாசிரியர்
அவ்வக்காண் டத்து அவ்வந்நாட்டு மன்னரை உயர்த்துக் கூறுதல் முறையாகலான் என்க. புலியும்
வில்லும் என்றது, அவற்றினையுடைய மன்னரை. மன்னரும் என்னும் உம்மை தொக்கது. இயம்பும்,
முற்று. மன், அசை. |
|