|
1
2
3 |
உரைப்பாட்டு
மடை
குடப்பால் உறையா குவியிமில் ஏற்றின்
மடக்கணீர் சோரும் வருவதொன் றுண்டு ;
உறிநறு வெண்ணெய் உருகா வுருகும்
மறிதெறித் தாடா வருவதொன் றுண்டு ;
நான்முலை யாயம் நடுங்குபு நின்றிரங்கும்
மான்மணி வீழும் வருவதொன் றுண்டு ; |
|
உரைப்பாட்டு மடை - உரையாகிய பாட்டை இடையே மடுத்தது.
"குடப்பால் உறையா................ஒன்றுண்டு"
குடப்பால் உறையா - நாம் உறையிட்ட தாழிகளிற் பாலும் தோய்ந்தில, குவி இமில் ஏற்றின்
மடக்கணீர் சோரும் - திரண்ட முரிப்பினை யுடைய ஆனேற்றின் அழகிய கண்களினின்றும் நீர்
உகும் ; வருவது ஒன்று உண்டு - ஆதலான் நமக்கு வருவதோர் தீங்கு உண்டு ; உறைதல் - தோய்தல்.
குவிதல் - திரளுதல். மடம் - ஈண்டு அழகு. "உறிநறு வெண்ணெய்.........ஒன்றுண்டு" உறிநறு
வெண்ணெய் உருகா - உறிக்கண் வைத்த முதல் நாளை வெண்ணெய் உருக வைத்தன உருகுகின்றில,
உருகும் மறி தெறித்து ஆடா - ஆட்டுக் குட்டிகளும் துள்ளி விளையாடாமற் குழைந்து கிடக்கும்;
வருவது ஒன்று உண்டு - ஆதலான் நமக்கு வருவதோர் தீங்கு உண்டு ;
உருகுதல் - ஒன்று நெகிழ்தல், மற்றொன்று
குழைந்துகிடத்தல். இனி. உருகும் என்ற பாடத்தினை உருகி எனக்கொண்டு உருகி ஆடா எனவும்
முடிப்ப. உருகி - மெலிந்து.
"நான்முலை.........ஒன்றுண்டு" நான் முலை ஆயம் நடுங்குபு நின்று இரங்கும் - நான்கு முலைகளையுடைய
பசு நிரை மெய் நடுங்கி நின்று அரற்றும், மான் மணி வீழும் - அப் பசுக்களின் கழத்திற்கட்டிய
மணிகளும் அற்று நிலத்தில் விழும் ; வருவது ஒன்று உண்டு - ஆகலான் நமக்கு வரும் தீங்கு
ஒன்று உண்டு ;
ஆயம் - ஆனிரை. நடுங்குபு - நடுங்கி.
மால் மணி - பெரிய மணி யென்றுமாம். |
|